ஆடாதொடா, நொச்சி இவையிரண்டும் இயற்கை பூச்சிவிரட்டி..! பயன்படுத்துவோம் ; பலன் பெறுவோம்..!
விவசாயிகளுக்கு ஆடாதொடா மற்றும் நொச்சி நாற்றுகள் வழங்கப்பட்டன. அருகில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி உள்ளார்.
நஞ்சில்லா உணவு உற்பத்தியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கவும் உறுதிப்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கில் மதுக்கூர் வட்டாரத்தில் உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய செடிகளான ஆடாதோடா நொச்சி நடவு கன்றுகள் விவசாயிகளுக்கு 100% வழங்கப்பட்டு வருகிறது.
இத் திட்டமானது மீண்டும் இயற்கை பூச்சி விரட்டி பயன்பாட்டினை நடைமுறைக்கு கொண்டு வந்து விவசாயிகளுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை குறைக்கவும் மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும் பூச்சி மற்றும் நோய்களை இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்து முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆடாதோடா நொச்சி போன்ற இயற்கை பூச்சி விரட்டிகள் ஒரு விவசாயிக்கு வகைக்கு 25 வீதம் அதிகபட்சம் 50 கன்றுகள் 100% கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கையாகவே மதுக்கூர் வட்டாரத்தில் நெல் மற்றும் தென்னந்தோப்புகளை சுற்றிலும் நொச்சி செடிகள் வேலிகளாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் காய்ச்சல் போன்ற சிறு நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் கசாயம் தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வீடுகளில் வேலி ஓரங்களில் ஆடாதொடா வளர்த்து வருகின்றனர்.
ஆடாதொடா மற்றும் நொச்சி இலைகள் மனிதர்கள் உடல் பாதிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை குறைந்த செலவில் நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து பாதுகாத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் இந்த இரண்டு செடிகளின் இலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஆடாதொடா இலைகளில் வாசீனின் மற்றும் வாசினோன் போன்ற ஆல்கலாய்டுகள் அவற்றின் கசப்பு தன்மையால் சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தானிய சேமிப்பு கிடங்குகளிலும் இவற்றை சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். இதற்கு விவசாயிகள் ஆடாதொடா நொச்சி இலைகளை ஐந்து கிலோ அளவுக்கு பறித்து அரைத்து கூழாக்கி பின் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பின் இந்த மூலிகை கரைசலை வடிகட்டி வடிநீரை பூச்சி நோய் தாக்கப்பட்ட பயிர்களின் மீது தெளித்து பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம். மூலிகை பூச்சி விரட்டிகள் பயிர்களின் விளைச்சலை பெருக்குவதுடன் வளர்ச்சி ஊக்கிகள் ஆகவும் செயல்படுகின்றன.
புவி வெப்பமடைதல் பருவமழையின் மாறுபாடுகள் போன்ற நிகழ்வுகள் காரணமாக பயிர்களில் ஏற்படும் எதிர்பாராத பூச்சி நோய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பலவித பூச்சி மருந்துகளை, நோய் மருந்துகளை பயன்படுத்தி அதனால் செலவினம் அதிகரிக்கிறது.
இதனை கட்டுப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரே பூச்சிக்கொல்லி பண்புகள் உடைய பாரம்பரிய தாவரங்களான ஆடாதொடா நொச்சி நடவு கன்றுகள் பட்டுக்கோட்டை தென்னை நர்சரியில் இருந்து தோட்டக்கலைத் துறை மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் விரும்பும் விவசாயிகளுக்கு வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாவரங்களை தரிசு நிலங்கள் வயல் வரப்புகளில் நடவு செய்து பரவலாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரி பூச்சிக்கொல்லி நடவு கன்றுகள் தலா ரூபாய் 2 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் ராமு ஆகியோர் விவசாயிகளுக்கு தேவையான கன்றுகளை வழங்கினர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி உயிரி பூச்சிக்கொல்லி நடவு குச்சிகளின் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உயிர் பூச்சிகள் செடிகளின் தன்மைகள் பற்றி விளக்கம் அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu