சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!
X

குறைந்த செலவில் ஜிப்சம் வழங்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி. 

அதிக நிலத்தடிநீர் மற்றும் உர பயன்பாட்டினால் சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை ஜிப்சம் சீரமைத்து தருவதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான நெல் சாகுபடியினாலும் அதிக அளவு நிலத்தடி நீர் பயன்பாட்டினாலும் அதற்கேற்ற அதீத உர பயன்பாட்டினாலும் விவசாய பயன்பாட்டுக்கான மண்ணானது தனது கட்டமைப்பினை இழந்து அதன் தொடர்ச்சியாக அதன் வேதியல் பண்புகளையும் இழந்துவிட்டது. இதன் காரணமாக பயிரின் வளர்ச்சியானது பாதிக்கப்பட்டு மகசூல் குறைவு ஏற்படுகிறது.

இதன் காரணமாக மண்ணில் உள்ள நுண்ணுயிர்களும் மண்ணுடனான தங்கள் தொடர்பு அறுந்து அதன் விளைவாக போதுமான இயற்கை ஊட்டச்சத்தையும் லாபகரமான பயிர் வளர்ச்சிக்கு தேவையான வேர் வளர்ச்சியும் இன்றி பாதிக்கப்படுகிறது. இதனை சீரமைப்பதில் ஜிப்சம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிப்சம் என்பது கால்சியம் மற்றும் கந்தகம் என்னும் இரண்டு வித சத்துக்களை பயிருக்கு அளிக்கும் ஆதாரமாக உள்ளது.

அமில மண்ணை மேம்படுத்துகிறது. அலுமினிய நச்சுத்தன்மையை அகற்றுகிறது. மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி நீர் ஊடுருவலை அதிகரிக்கும்.விவசாயிகள் பொதுவாக கடலை பூ பூத்த 45 ஆம் நாள் முதல் விழுது அதிக அளவில் இறங்குவதற்காக ஜிப்சத்தை பயன்படுத்துகின்றனர். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகம் பயிர் விளைச்சலை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த மூலமாகும்.

மேலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பயிரின் வேர்களால் உறிஞ்சப்படுவதற்கு கால்சியம் அவசியமாக உள்ளது கால்சியம் குறையும் போது உறிஞ்சும் வழிமுறைகள் தோல்வியடையும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் வேரின் வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.. மண்ணின் மேற்பரப்பில் இடும் ஜிப்சம் ஆனது காற்று மற்றும் நீரின் இயக்கத்துக்கு சாதகமான மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

சோடியம் குளோரைடு நிறைந்த உப்பு மண்ணை சீரமைக்க மண்ணின் கட்டமைப்பில் சோடியத்தை நீக்கி மண்ணின் கட்டமைப்பை சரி செய்வதன் மூலம் மண்ணின் வேதியல் பண்புகளையும் சரி செய்கிறது. அதனைச் சார்ந்த மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் இணைப்பு சரி செய்யப்பட்டு போதுமான இயற்கை ஊட்டச்சத்தையும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான வேர் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.


மூன்று போகமும் நெல்சாகுபடி செய்யும் வயல்களில் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் பயன்பாட்டினால் நீருடன் சேர்ந்து பல்வேறு உப்புகளும் கரைத்து மேல்மண்ணுக்கு கொண்டுவரப்படுவதால் மண்துகள்களுக்கு இடையிலான பிணைப்பு தன்மை இழந்து நீரானது மீள நிலத்தில் ஊடுருவது தடுக்கப்படுகிறது. எனவே நெல் வயல்களில் தொடர்ச்சியான நீர் பயன்பாடு மண்ணின் காற்றோட்டத்தினை குறைத்து வேரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதிக பாசிகளின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.

ஜிப்சம் இடும் பொழுது சோடியம் உள்ளிட்ட உப்புகள் நீக்கப்பட்டு மண்ணின் கட்டமைப்பு மாறுவதால் மண்ணின் வடிகால் திறன் மேம்படுகிறது அதிகளவு நீரானது உறிஞ்சப்பட்டு வறட்சி காலங்களிலும் பயிரின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது.

அதேபோல கரையும் மணிச்சத்து உரங்களை நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க ஜிப்சத்தில் உள்ள கால்சியம் சிறப்பாய் உதவுகிறது.எனவே மண்ணின் மாசுபாட்டினை குறைக்கவும் ஒரு மண் திருத்தியாகவும் விளங்கும் ஜிப்சத்தை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தி ட வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கலைஞர் கிட்ட பஞ்சாயத்துகளுக்கு மானியத்தில்வழங்கிவருகிறது.அதை ஏக்கருக்கு 200 கிலோ நெல் பயிருக்கும் நிலக்கடலைக்கு 400 கிலோ என்ற அளவிலும் தென்னையில் இளமரங்களுக்கு மரத்துக்கு ஒரு கிலோ என்று அளவிலும் வளர்ந்த மரங்களுக்கு மரத்துக்கு இரண்டு கிலோ என்ற அளவிலும் இட்டு வேருக்கருகில் உள்ள மண்ணின் கட்டமைப்பை மாற்றி இளம் வேர்களை அதிக அளவில் உருவாக்கிடலாம்.

எனவே, விவசாயிகள் குறைந்த செலவில் சிறந்த மண் திருத்தியாக உள்ள ஜிப்சத்தினை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!