வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை எடுக்கும்?

வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை எடுக்கும்?
X

விக்ரமம் கிராமம், விவசாயி  பிரபாகர் வயலில் காப்பர் சல்பேட் வெள்ளைத் துணியில் கட்டி பொட்டலங்களாக வயலில் ஆங்காங்கே பாசிகட்டுபாட்டிற்காக இடப்பட்டது.

கரையும் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ள வயல்களில் பாசியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை நெல் 400 எக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரிய கோட்டை நெம்மேலி விக்ரமம் மதுரபாசாணிபுரம், காடந்தங்குடி, சிரமேல்குடி இளங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களில் அதிக அளவில் பாசியின் தாக்குதல் காணப்படுகிறது. பாசியானது முழுவதுமாக படர்ந்து நெல்பயிரின் வேரின் வளர்ச்சி காற்றோட்டம் முழுவதும் கட்டுப்படுத்துவதோடு மண்ணிலிருந்து சத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படுவதும் தடுக்கப்படுகிறது.

பாசி உள்ள வயல்களில் ஹைட்ரஜன் சல்பைடு அதிக அளவில் வெளியேறுவதால் கொத்து கொத்தாக பயிர்கள் காய்ந்து விடும். பாசியின் தாக்குதலுக்கு முக்கிய காரணம் அதிக அளவு கரையும் பாஸ்பரஸ் உள்ளம் நிலம் மற்றும் அந்த அத்தகைய நிலங்களில் இருந்து ஓடிவரும் நீரின் தன்மையால் அதிக பாசிகள் உருவாகும்.

எனவேதான் பாசித் தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் டிஏபி உரம் இடுவதை முழுமையாக தடுக்க சொல்கிறோம். பாசியின் அளவுக்கு தக்கவாறு ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 50 கிராம் அல்லது 100 கிராம் ஆக பழைய வேட்டி(காட்டன்) துணிகளில் சிறு சிறு பொட்டலங்களாக கட்டி ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் போட்டு வைத்து விட்டால் காப்பர் சல்பேட் கரையும் இடத்தை சுற்றி பாசி விதைகள் உருவாவதை தடுத்து பாசியின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.


அதிகபாசி வளர்ச்சி உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ காப்பர் சல்பேட் பயன்படுத்தி பாசியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். காப்பர் சல்பேட் இடும் பொழுது வயலில் ஈரம் மட்டும் இருந்தால் போதுமானது. நீரை வடித்து விட வேண்டும். மேலும் இத்துடன் ஏக்கருக்கு 400 கிலோ வரை ஜிப்சம் விடுவதன் மூலம் பாசியை கட்டுப்படுத்தலாம்.

ஜிப்சத்தில் உள்ள சல்பர் சத்து கரையும் பாஸ்பரஸ் பாசிகளுக்கு கிடைக்காத வண்ணம் செய்யும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் கரையும் பாஸ்பரஸ் உடன் இணைந்து கால்சியம் பாஸ்பேட் ஆக மண்ணில் நிறுத்தப்படுகிறது. இதனால் பாசியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. கால்சியம் வேரின் வளர்ச்சிக்கு உதவி மண்ணின் கட்டமைப்பையும் மாற்றுவதால் ஆழத்தில் உள்ள சத்துகளையும் பயிர் எளிதாக எடுத்துக் கொள்ளும்.

மண் துகள்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து மேல்நோக்கிய நீரோட்டத்தை குறைத்து கீழ்நோக்கிய நீரோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பாசி உள்ள வயல்களில் முதலில் காப்பர் சல்பேட்டையும் அதன்பின் ஜிப்சமும் இடுவதன் மூலம் மிக எளிதாக பாசியை கட்டுப்படுத்தி நமது நெல் பயிரையும் காக்க முடியும்.

பாசி அதிகம் உள்ள வயல்களில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவது சிறந்தது.எனவே விவசாயிகள் தற்போது மதுக்கூர் வேளாண் விரிவாக்கமையத்தில் மானிய விலையில் ஜிப்சம் வழங்கப்படுவதால் மானியத்தில் ஜிப்சம் பெற்றுக் கொள்ள மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!