இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
எள் வயலில் எள் பயிரினை ஆய்வு செய்யும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.
இரண்டு முறை உழவு, இரண்டு முறை நீர்ப்பாசனம், இரண்டு முறை இயற்கை இடுபொருள் தெளித்து செலவில்லாத எள் சாகுபடி செய்து அசத்தும் அத்திவெட்டி விவசாயி வடிவேல் மூர்த்தி.
தஞ்சாவூர்மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி வடிவேல் மூர்த்தி அதிக செலவில்லாத இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்து எள் வயலில் பயன்படுத்தி பூச்சி நோய் தாக்குதல் இன்றி தரமான எண்ணெய் தரும் எள் உற்பத்தி செய்துள்ளார்.
மீன் அமினோ அமிலம் போன்ற இயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஎம்வி 3 என்ற எள் ரகம் பயிரிட்டுள்ளார். எள் சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைத்து. அதன் பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் செடிகளை விட்டு, விட்டு இதரச் செடிகளை அகற்றிஉள்ளார். இதன் மூலம் மாவுக்கு 100 கிலோ வரை மகசூல் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பயிர் தற்பொழுது நன்கு விளைந்துள்ளது. சாதாரண முறையில் நிலத்தை உழுது எள் பயிர் செய்தால் மாவுக்கு 50-60 கிலோ வரை எள் மகசூல் கிடைக்கும்.எள் விதைத்த 15 நாள்களுக்குப் பிறகு குத்துக்கு ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு மற்ற செடிகளை களைத்து விட்டேன். இந்த முறையில் செடிகள் நன்கு செழித்து வளர்கிறது.
ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 8-10 செடிகள் வரை உள்ளது.. 25-30 ம் நாளில் மீன் அமினோ அமிலம் மற்றும் 45 ம் நாளில் போரான் எருக்கு கரைசல் மட்டும் இலைவழி உரமாக தெளித்தேன். இதனால் எள்பயிரில் பூச்சி நோய் தாக்குதலும் இல்லை . மீன்அமினோ அமிலம் தெளித்ததன் மூலம் செடிக்கு 15-18 கிளைகளும் ஒவ்வொரு கிளையிலும் சராசரியாக 25 காய்களும் வைத்துள்ளது.
தற்போது எள்பயிரில் கொண்டை பூச்சிகள் தென்படுவதால் மூலிகை பூச்சி விரட்டி அறுபதாம் நாளில் தெளித்து உள்ளேன்.எனவே மாவுக்கு 100 கிலோ வரை மகசூல் எதிர்பார்ப்பதாக
வடிவேல் மூர்த்தி நம்பிக்கையுடன் தெரிவித்தார். வடிவேல் மூர்த்தி தற்சார்பு முறையில் வயலிலேயே சிறு கொட்டகை அமைத்து அதில் மீன் அமினோ அமிலம் ஜீவாமிர்தகரைசல் போரான் எருக்குக் கரைசல் மூலிகை பூச்சி விரட்டி போன்றவைகளை தயாரித்து பயன்படுத்தியும் வருகிறார்.
இதனை பாபநாசம் அம்மாபேட்டை வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் குழு நிர்வாகிகள் வந்து பார்வையிட்டு போரான் எருக்கு கரைசல் தயாரிப்பு முறை பற்றி கேட்டறிந்தனர். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் அறிவுரைப்படி வேளாண் அலுவலர் சாய்னா அத்திவெட்டி இயற்கை விவசாயிகள் குழுவினை பார்வையிட்டு அதன் பொருளாளர் வடிவேல் இயற்கை இடுபொருள் தயாரிப்பு பணிகளையும் கேட்டறிந்தார். வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் சி சி இளமாறன், மற்றும் வைசாலி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்த புதிய தொழில் நுட்பத்தில் எள் சாகுடி செய்யப்பட்டுள்ளதை அருகில் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாமல் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமங்களில் தங்கி வேளாண் செய்முறைகளை அறிவதன் ஒரு படியாக இயற்கை விவசாய குழுவின் இடுபொருள் உற்பத்தி முறை மற்றும் வயல்களில் பயன்படுத்தும் முறை பற்றி நேரடியாக பயிற்சியும் பெறுகின்றனர்.
மீன்அமினோஅமிலம் ஜீவாமிர்தம் மூலிகை பூச்சி விரட்டி போன்றவற்றை மதுக்கூர் வட்டாரத்தின் பிற கிராமங்களில் இருந்து நெல் உளுந்து பயிர்களுக்கு பயன்படுத்துவதற்காக விவசாயிகள் வந்து இங்கு ஆர்வமுடன் பார்த்து வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் இரசாயன உரம் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டினை தவிர்த்து தற்சார்பு முறையில் இயற்கை இடுபொருள்களான மீன்அமினோஅமிலம் ஜீவாமிர்தம் மூலிகை பூச்சி விரட்டி போன்றவற்றை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறவும் குறைந்த நீர் தேவை உள்ள உளுந்து எள்ளு போன்ற பயிர்களை சாகுபடி செய்திடவும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu