திருவையாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் கைது

திருவையாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் கைது
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்.

திருவயைாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தையின் கட்டை விரலை வெட்டியதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்து பூ வியாபாரியை அதே இடத்தில் வைத்து கொலை செய்த பிள்ளைகள், கொலைக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஈச்சங்குடி புதுதெருவை சேர்ந்தவர் பாலன். பூ வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலனுக்கும் ஈச்சங்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜி என்கிற ராஜதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து கடந்து 2019ஆம் ஆண்டு ஈச்சங்குடியில் வைத்து ராஜதுரையின் தந்தை சந்திரகாசனை பாலனும் அவரது மகன் பாபுவும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவரது கட்டை விரல் துண்டானது. இதுகுறித்து பாலன் மற்றும் அவரது மகன் பாபு மீது கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தனது தந்தையை வெட்டிய பாலனை எப்படியாவது வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற முன்விரோதத்தில் ராஜதுரை அடிக்கடி பாலனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் பாலன் ஈச்சங்குடியிலிருந்து குடும்பத்துடன் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிக்கு குடியேறிய அவர் கபிஸ்தலம் கடைத்தெருவில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜதுரை கபிஸ்தலத்தில் பூ வியாபாரத்தை முடித்துவிட்ட வீட்டிற்கு செல்லும்போது, பாலனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளர். அதன்படி நேற்று முன்தினம் கபிஸ்தலத்தில் பூ வியாபாரத்தை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சுந்தரபெருமாள் கோவில் நோக்கி பாலன் சென்றார். இதனை காரில் இருந்தபடி கண்காணித்த ராஜதுரை அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

கபிஸ்தலம் கும்பகோணம் சாலை உமையாள்புரம் ஸ்ரீ அம்மன் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ராஜதுரை காரை கொண்டு பாலனின் மோட்டார் சைக்கிளில் மீது வேகமாக மோதியுள்ளார்‌.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலன் படுகாயம் அடைந்தார். உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று பார்த்த ராஜதுரை மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர்கள் வினோத், ராஜ் என்கிற மரியதாமஸ், பெர்னாண்டஸ் ஆகியோர் பாலன் சாகவில்லை என அறிந்து தங்கள் காரில் வைத்திருந்த கம்பி மற்றும் கட்டையால் பாலனை பலமாக தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாலனை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவையாறு இஞ்சிகொல்லையை சேர்ந்த சரண் என்பவர் பாலனின் மகன் பாபுவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாபுவும் அவரது அண்ணன் சதீஷ் ஆகியோர் உமையாள்புரம் பகுதிக்குச் சென்றபோது அங்கு பாலனின் மோட்டார் சைக்கிள் மட்டும் கீழே சரிந்து கிடந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பவத்தை பார்த்த சரண் என்பவர் பாபுவிடம் கொடுத்த தகவலின் பேரில் தனது தந்தை பாலனை கடத்தி சென்ற ராஜதுரை மற்றும் அவரது உறவினர்கள் மீது கபிஸ்தலம் போலீசில் பாபு புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட பாலனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருவையாறு தாலுகா ஊத்தங்குடி அருகே சிறுபுலியூர் கிராமத்தில் உள்ள ஓடைக்கரையில் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பாலன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் மற்றும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலனின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பாலனை கடத்திச் சென்று கொலை செய்த நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து திருவையாறில் உள்ள உறவினர் வீட்டில் ராஜதுரையும் அவரது உறவினர்களும் மறைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்த அங்கு சென்ற தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளிகளான ராஜதுரை, ராஜூ என்கிற மரியதாமஸ் பெர்னாண்டஸ், வினோத் மற்றும் இந்த கொலைக்கு தூண்டுகோலாக இருந்த ராமன், கணேசன், கோமதி, சாந்தி, மங்கையர்கரசி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ராஜ் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆண்கள் 5 பேரும் தஞ்சாவூர் கிளைச் சிறையிலும், பெண்கள் மூன்று பேர் பாபநாசம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தனது தந்தையை வெட்டிய நபரை பழிவாங்குவதற்காக உறவினர்கள் உதவியுடன் தந்தை வெட்டப்பட்ட அதே ஊருக்கு கடத்திச் சென்று மகன் வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story