கும்பகோணத்தில் ட்ரோன்கள் மூலம் விவசாய பணி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு, நாற்றங்கால் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வயல்வெளியில் தெளிப்பதற்கான முயற்சியில், கும்பகோணம் அருகே உள்ள கடிச்சப்பாடியை சேர்ந்த விவசாயி வெங்கட் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி வழக்கத்தை விட பெரிய அளவில் தோற்றமளிக்கும் ட்ரோனை ரூ.9 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த ட்ரோனின் மேலுள்ள கேன்களில் திரவ வடிவிலான இயற்கை உரமான பஞ்சகவியம் மற்றும் பூச்சி மருந்துகள் அடைக்கப்படுகின்றன. இவ்வாறு பூச்சிமருந்து அடைக்கப்பட்ட ட்ரோன்கள் நவீன ஆண்ட்ராய்டு போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வயல்வெளிகளில் பறக்க விடப்படுகின்றன.
இவை வயல்வெளிகளில் பறந்தபடியே உரம் மற்றும் பூச்சி மருந்துகளை தெளிக்கின்றன. ஒரு ஏக்கரில் வேலை ஆட்கள் இரண்டு தினங்களில் செய்யக்கூடிய வேலையை இந்த ட்ரோன்கள் 5 நிமிடங்கள் செய்து முடிப்பதால் இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் இந்த ட்ரோன்கள் மூலம் உளுந்து உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை பயிரிட பயன்படுத்தப்பட உள்ளதாக விவசாயி வெங்கட் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது
நான் பொறியியல் படித்துவிட்டு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாய பணிகளில் ஈடுபட்டுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக நிலவி வருகிறது.
மேலும் விவசாயத் தொழிலாளர்களின் கூலியும் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக எந்திரம் மூலம் விவசாய பணிகளில் ஈடுபட திட்டமிட்டு முதற்கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் வயல்களில் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் விமலநாதன் கூறும்போது.
விவசாய பணிகளில் ஈடுபடும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக நிலையை வருவதால் மத்திய மாநில அரசுகள் விவசாய பணிகள் தடையின்றி நடைபெற இதுபோன்ற ட்ரோன்களை அதிக அளவு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu