ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்.
கள் விற்பதாக கூறி தொழிலாளர்கள் மீது வழக்கு போடாமல், அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களிடம் இருந்து 20,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட காவலர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நுங்கு மற்றும் பதநீர் சீசன் என்பதால் ராமநாதபுரம், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பனைமரத்தை குத்தகை எடுத்து நுங்கு, பதநீர், பனை வெல்லம் தயாரித்து விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவர் தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் சூரியம்பட்டி அருகில் விளைநிலங்களில் உள்ள பனைமரங்களை குத்தகை எடுத்து நுங்கு, வெட்டியும், பதநீர் விற்றும் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தஞ்சை தாலுகா காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று காவலர்கள், மாரியம்மாளின் வீட்டிற்கு வந்து, அங்கு இருந்த அவரது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரிடமும் எங்கு கள் பதுக்கி வைத்துள்ளீர்கள் என கேட்டு கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் நிலத்தின் உரிமையாளரையும், மாரியம்மாளின் மூத்த மகனையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரையும் விட வேண்டுமானல் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறிய பூங்கொடி 20,000 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு இருவரையும் அழைத்து வந்ததாக கூறுகிறார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள் கூறுகையில், நாங்கள் நுங்கு மற்றும் பதநீர், பனை வெல்லம் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறோம், ஆனால் காவல்துறையினர் தொடர்ந்து தங்களை மிரட்டி அவ்வப்போது பணம் பெறுகின்றனர். பணத்தையும் பெற்று கொண்டு சிறுவர்கள் என்று கூட பாராமல் அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் நாங்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளோம், எனவே ஒரு தவறும் செய்யாத எங்களை தாக்கி பணம் பெற்று கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu