மாஸ்க் அணியாதது குறித்து கேள்வி கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன் கைது

மாஸ்க் அணியாதது குறித்து  கேள்வி கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன் கைது
X
அதிகாரிகளை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அதை வீடியோ எடுத்த அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

மாஸ்க் அணியாதது குறித்து கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த வெட்டிக்காடு பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன்(57,) மகன்கள் மதியழகன்(37), அறிவழகன்(27) . இவர்கள் அப்பகுதியில், ஹோட்டல் மற்றும் மளிகை கடைகளை நடத்தி வருகின்றனர்.ஹோட்டல், மளிகை கடை மெயின் ரோட்டில் இருப்பதால், சுற்றுவட்டார பகுதியினர், இந்த கடையில் கூட்டமாக நின்று டீ குடிப்பது, சாப்பிடுவது அதிகம்.

இந்நிலையில், ஹோட்டலில் சமூக இடைவெளி இல்லாமல் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரத்தநாடு வருவாய் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான, வருவாய் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஹோட்டலுக்கு சென்று, மாஸ்க் அணியாத பொதுமக்களை எச்சரிக்கை செய்து, அபராதம் விதித்து வந்தனர். இதையடுத்து, சவுந்தரராஜன், மதியழகன், அறிவழகன் மூவரும், தங்களது ஹோட்டல் மற்றும் மளிகை கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து விட்டதாக கூறி, அதிகாரிகளை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதை வீடியோ எடுத்த அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து, ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, ஒரத்தநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில், சவுந்தரராஜன், மதியழகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அறிவழகனை தேடி வருகின்றனர். ஹோட்டல் மற்றும் மளிகை கடைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story
ai future project