வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் : வேளாண் உதவி இயக்குனர்

வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் : வேளாண் உதவி இயக்குனர்
X

நெல்வயலில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ள வாத்து வளர்ப்பவரிடம் கலந்துரையாடும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

ducks helps promoting organic farming-வாத்துகளை வயல்களில் மேய்ச்சலுக்கு விடுவதால் பூச்சிகள் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு இயற்கை விவசாயத்திற்கும் வழிசெய்கிறது.

தஞ்சை மாவட்டம்,மதுக்கூர் வட்டாரம், அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.

நெல் அறுவடைக்குப் பின் வயலில் மெசின் அறுவடை முடிந்த வைக்கோல் ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கிறது. அதை அப்படியே வைத்து நேரடியாக வயலில் நீர் பாய்ச்சும் போது வைக்கோல் அழுகத் துவங்குகிறது. இந்த காலகட்டத்தில் வாத்து வளர்ப்பவர்கள் 3000 வாத்து குஞ்சுகளுடன் 30 நாள் வயதுடைய வாத்து குஞ்சுகளை நெல் வயலில் விடுகின்றனர். வாத்து காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வயலில் மேய்க்கப்படுகிறது.

30 நாள் வாத்து குஞ்சுகளுக்கு உரிய தீவனம் அளிக்கப்பட்டு, தேவையான தடுப்பூசிகள் இடப்பட்டு வளர்ப்பதற்காகவே தஞ்சை மாவட்ட நெல் வயல்களுக்கு கொண்டுவரப்படுகிறது. 20 லிருந்து 30 நாள் வரை வாத்துகள் வயலில் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. கொட்டிலில் அடைக்கப்படும் வரை வாத்துகள் வயலில் தொடர்ச்சியாக நீருக்குள்ளும் சேற்றிலும் வாயை விட்டு தொடர்ந்து கொத்திக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் நெல் வயலில் உள்ள களை விதைகள் உண்ணபடுவதோடு, இளம் களைச் செடிகளையும் கொத்தி தின்றுவிடும்.

மேலும் சேற்றில் இருக்கும் புழுக்களையும் தவளை மற்றும் சிறு சங்கு பூச்சிகளையும் இவை பிடித்து உண்ணுகின்றன. இதனால் வாத்து மேய்க்கப்படும் வயல்களில் பூச்சிகளின் தொல்லை மற்றும் களைகளின் தொல்லை இருக்காது. அதனால் களை மற்றும் பூச்சி கட்டுப்பாடு எந்த செலவினமும் இல்லாமல் விவசாயிக்கு குறைகிறது. இது மட்டும் இன்றி வாத்துகள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதால் அவை இடும் எச்சமும் மண்ணில் சேர்ந்து மண்ணின் கரிமச்சத்தினை அதிகரிக்கிறது.

இது பயிருக்கு ஒரு நல்ல சத்தான இயற்கை உரமாக அமைகிறது. இயற்கை சாகுபடிக்கு முதல் படியாகவும் அமைகிறது. வயலில் கிடைக்கும் வைக்கோல்களையும் தொடர்ச்சியாக மிதித்து விடுவதால் மண்ணின் காற்றோட்டமும் அதிகரித்து வைக்கோல் விரைவில் மக்கி விடுகிறது. வாத்துகளை முட்டாள் என்று சொல்லுவார்கள். ஆனால், வாத்துகள் விவசாயிகளின் அடிப்படை பணியாட்களை போல சிறந்த பணிகளை செய்கின்றன. ஆடு மாடுகள் கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் வழங்க வேண்டும். ஆனால், வாத்து கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் ஏதும் வழங்கத் தேவையில்லை.

வாத்து வளர்ப்பவர்கள் வயலில் மேய்ப்பதன் மூலம் இயற்கையான முறையில் மூன்று மாதத்தில் தங்களுடைய வாத்துக்களை செயற்கை தீவனம் இன்றி இயற்கையாக வளர்த்துக் கொள்கின்றனர். வயலின் தன்மைக்கேற்ப வாத்து வளர்ப்பவர்கள் வாத்துக்களை தேவைப்படும் விவசாயிகளின் வயல்களுக்கு வண்டிகள் மூலம் மாற்றிச் செல்லும் செலவு மட்டுமே. 3000 வாத்து குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் மருந்து போக்குவரத்து செலவினம் உட்பட 2 லட்சம் வரை செலவாகிறது.

வளர்ந்த வாத்துகளை ரூபாய் 250 முதல் 300 வரை விற்பனை செய்து விடுவார். இது வாத்து வளர்ப்பவருக்கான லாபம். விவசாயிக்கு செலவில்லாத பூச்சி மருந்து இல்லாத ரசாயனமற்ற களை கட்டுப்பாடு, பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் இயற்கை உரம் செலவின்றி கிடைக்கிறது. இதுவே விவசாயிகளுக்கான லாபம். எனவே விவசாயிகள் தற்சார்பு முறையில் செலவு இன்றி சாகுபடி செய்ய வாத்துகளின் வரத்தும் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு