சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இக்கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.
இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நாளான திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கார்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோயில் உள் பிரகாரத்தில் ரதரோஹனம் (சிறிய தேரில்) சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் காலை 5 மணி முதல், இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்க கவசம், வைரவேல் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதன்பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையும், வெள்ளிமயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி உள்பிரகார புறப்பாடும், அதன்பிறகு தீபக்காட்சியும், இரவு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான 20 -ம் தேதி காலை கோயில் வளாகத்தில் உள்ள வஷ்ரதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸார் செய்திருந்தனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu