5 வருடமாக அல்வா கொடுக்கும் கூட்டுறவு சங்கம், அசராமல் போராடும் விவசாயிகள்
சுவாமிமலை கூட்டுறவு சங்கத்தில் 5 வருடமாக அடமானம் வைத்த நகையை மீட்க போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்
கும்பகோணம் அருகே சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாததால், விவசாயிகள் சங்கத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவாமிமலையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுவாமிமலை, மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்கடன், நகைக் கடன் பெற்று விவசாய சாகுபடியை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சங்கத்தில் அடகு வைத்தவர்கள், சில மாதங்கள் கழித்து நகையை மீட்க சென்றபோது, ஊழியர்கள் இல்லை, சாவி இல்லை எனக்கூறி சங்க பணியாளர்கள் விவசாயிகளை திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அடகு வைத்த நகைகளை மீட்க போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனால் அவர்களுக்கு நகை கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடந்தாண்டு விவசாயிகள் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதையடுத்து சங்கத்தின் செயலாளர் செல்வம் என்பவர் பாதுகாப்புபெட்டக சாவியுடன் தலைமறவாகிவிட்டார் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகள் நீதிமன்றத்தை நாடியபோது, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை பொட்டலங்கள் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் நகைகள் ஒப்படைக்கப்பட்டு ஓராண்டாகியும், இதுவரை தங்களுக்கு நகைகள் கிடைக்கவில்லை, அரசு அறிவித்துள்ள நகை தள்ளுபடியில் தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் பலரும் ஒன்றுதிரண்டு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் தகவல் அறிந்ததும் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சார்பில் சரக ஆய்வாளர் சிவக்குமார், விவசாயிகள் சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் பாலசுப்பிரமணியன், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், போலீஸார் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் விரைவில் நீதிமன்றத்தில் உள்ள நகையை பெற்றுத் தருவதும், நகைகள் கிடைக்காதவர்கள் காவல் துறையில் புகார் அளித்து தீர்வு காணுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில்: இந்த சங்கத்தில் 514 நகை பொட்டலங்களில், 45 பொட்டலங்கள் குறைவாக உள்ளது. 45 பொட்டலங்களிலும் சுமார் 1 கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததாக தெரிகிறது.
சங்கத்தின் செயலாளராக இருந்த செல்வம் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததோடு சரி, அந்த நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
5 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் முடங்கியுள்ளது. இந்த சங்கத்தை கலைத்துவிட்டு, இங்குள்ள விவசாயிகளை வேறு சங்கத்தில் சேர்த்து அவர்கள் விவசாயம் செய்ய உரிய நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
இந்த சங்கத்தின் முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நகைகளை தர வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu