கழிவு நீரால் சுகாதாரக்கேடு: நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கழிவு நீரால் சுகாதாரக்கேடு: நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X

கும்பகோணம் நகராட்சியைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பொதுமக்கள் பல முறை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது

கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை நகராட்சி சுத்தம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் யானையடி துக்கம்பாளையம்தெருவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளில் தேங்கி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக புதை சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பல முறை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று மிகவும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹஸ்கூல் சாலையில், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அங்கு வந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நகராட்சி செயற் பொறியாளர் மணி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, கழிவுநீர் தேங்கி உள்ள குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று பார்வை யிட்டனர். பின்னர் நகராட்சி கழிவுநீர் அப்புறப்படுத்தும் லாரி கொண்டுவரப்பட்டு, உடனடியாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவு நீர் அப்புறப்படுத்தப்பட்டது. இனிமேல், கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு, நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!