ராம நவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 9ம் நாளான இன்று ராமநவமியை முன்னிட்டு, கொரோனா தொற்று குறித்த, அரசு விதிமுறைகளின் படி, கட்டுத்தேரில் பிரகார உலா வந்த சீதா இராம லட்சுமண சுவாமிகளை ஏராளமானோர் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா கடந்த 13ம் தேதி கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, இராமநவமி விழா இனிதே தொடங்கியது இருப்பினும், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசின் விதிமுறைகளின் படி, சமூக இடைவெளி கடைபிடித்து, முககவசம் அணிந்த குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலாவிற்கு மாற்றாக பிரகார உலா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவில் 9ம் நாளான இன்று இராம நவமியை முன்னிட்டு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு, விசேஷமாக கட்டமைக்கப்பட்ட கட்டுத்தேரில், தேரோட்டத்திற்கு பதிலாக, பிரகார உலாவாக, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu