பயிரிடப்படும் மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு: வேளாண் அதிகாரிகள்
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு குறுகியகால ரகங்களான ஏஎஸ்டி16 சான்று பெற்ற நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் விதைகள் விநியோகிக்கப்படுவதால் 20 கிலோ நெல் வாங்கும் பட்சத்தில் ஒரு ஆதார் கார்டுடன் பதிவு செய்து பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வரும் அக்டோபர் 15 தேதிக்குப் பின் பருவமழையும் எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் குறுவை விதைப்பு மற்றும் நடவு பணிகளை ஜூலை முதல் வாரத்திற்குள் முடித்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அறுவடை செய்யப்படும் குறுவை நெல் பயிரானது மழை பாதிப்பின்றி அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே விவசாயிகள் நெல் சாகுபடி துவங்குவதற்கு முன் சணப்பு பயிரினை பசுந்தாள் உர பயிராக பயிரிட்டு உரச் செலவை குறைக்க முடியும். இதற்கு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும்.2 மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது. இதன் ஆழமான வேர் அமைப்பினால் மண்ணுக்குள் நன்றாகவே ஊடுருவி மண்ணின் கட்டமைப்பையும் மாற்றக்கூடியது மண்ணுக்கு காற்றோட்டத்தையும் அதிகரிக்கும். பிற பயிர்களுடன் போட்டியிடும் தன்மை அற்றது.
இப்பயிரின் முக்கியத்துவமே இது தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்து ரைசோபியம் எனும் நுண்ணுயிர் மூலம் வேர் முடிச்சுகளில் வைத்திருந்து பயிருக்கு அளிக்கக் கூடிய தன்மை உடையது. மண்ணிலும் தழைச்சத்தை அதிகரிக்கும். 7 வாரங்களில் இதை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் ஏக்கருக்கு 5 டன் வரை தழைகளை மண்ணில் சேர்க்கும். எளிதாக மக்க கூடிய தன்மையும் உடையது.ஏக்கருக்கு 40 முதல் ஐம்பது கிலோ வரை தழைச்சத்தை மண்ணில் சேர்க்கும் மண்ணில் கரிம வளமும் அதிகரிக்கிறது.
இதனால் தேவையற்ற உரச் செலவை குறைக்கலாம். தழை சத்துக்காக யூரியா வாங்கி செலவழித்து பயிரிடுவதை காட்டிலும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுவதால் உரச் செலவை மிக எளிதாக குறைக்க முடியும். மண்ணில் கரிம அமிலங்கள் அதிகரிப்பதால் நுண்ணுயிர்களும் பெருகும் மண்ணின் கட்டமைப்பும் மாறும்.
எனவே விவசாயிகள் எளிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உரச் செலவை குறைக்கவும் மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெற வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொண்டார்.
தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் வாட்டாகுடி அத்திவெட்டி இளங்காடு மற்றும் புலவஞ்சி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சணப்பை பயிரிட்டு பயன்பெறுகின்றனர். சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் பசுந்தாள் உரப் பயிரின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி பிற விவசாயிகளும் இதனை பின்பற்ற கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu