தமிழகத்திலேயே முதல் முறையாக அரசுப்பள்ளியில் கைப்பந்து போட்டி தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (19.10.2022)தொடங்கி வைத்தார்.
மாவட்டஆட்சித் தலைவர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசுஉயர்நிலைப் பள்ளியில் மாவட்டஅளவிலான கைப்பந்து போட்டி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கான இப்போட்டியில் தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளி ,பட்டுக்கோட்டை ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிள்ளையார்பட்டி அரசுஉயர் நிலைப்பள்ளி உட்பட 27 பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் தனது திறமைகளை கையாண்டு விளையாடினார்கள் என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன்,. அறிவானந்தம், ஊராட்சிமன்றத் தலைவர் உதயகுமார், பள்ளித்தலைமை ஆசிரியை சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கைப்பந்து போட்டி உருவான வரலாறு...
கைப்பந்தாட்டம் என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அனுப்பப்படும் பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, பந்து அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். கைப்பந்தாட்ட விளையாட்டிற்கென பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கைப்பந்தாட்டத்தை கையுந்து பந்தாட்டம் அல்லது வாலிபால் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு விளையாட்டாக கைப்பந்தாட்டம் 1964 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகிறது.
கைப்பந்தாட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள முழுமையான விதிகள் விரிவானவையாகும். ஆனால் ஆட்டம் எளிமையாக பின்வருமாறு விளையாடப்படுகிறது:
ஆட்டத்தைத் தொடங்குகின்ற அணியிலிருக்கும் ஒரு வீரர் அவர் பக்க ஆடுகளத்திற்கு வெளியே நின்று பந்தை கைகளால் அடித்து வலைக்கு மேலாக அடுத்த அணியினரின் ஆடுகளப் பகுதிக்கு அனுப்புகிறார். பந்தைப் பெறுகின்ற எதிரணியினர் பந்தை அவர்கள் பக்க ஆடுகளத்தின் தரையில் விழவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் அணியில் உள்ள மூன்று வீரர்கள் பந்தை மூன்று முறை தட்டுகிறார்கள். ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறைகள் பந்தைத் தட்டக்கூடாது என்ற விதி இங்கு பின்பற்றப்படுகிறது.
எதிரணியினரின் ஆடுகளத்திற்கு வெளியே தரையைத் தொடுமாறு பந்தை அடித்து விடுதல், எதிரணியினரின் ஆடுகளத்திற்கு செல்ல முடியாதவாறு பந்தை வலையில் அடித்து விடுதல்,பந்தை கைகளால் பிடித்து விடுதல், உந்தி தள்ளுவதற்குப் பதிலாக பந்தை பிடித்து எறிந்து விடுதல், ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை தட்டிவிடுதல், ஒரே அணியினர் நான்கு முறை பந்தை தட்டி அனுப்புதல், அணி வீரர்கள் வலையை கைகளால் தொட்டு விடுதல், தொடக்கத்தில் அடித்தெறியும் போது வீரரின் பாதம் ஆடுகளத்தின் எல்லையை தாண்டி விடுதல் போன்றவை தவறுகளாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக கைகளால் ஆடப்படும் இவ்விளையாட்டில் வீரர்களின் பிற உடல் பாகங்களில் பந்து படுவதும் தவறாகக் கருதப்படுகிறது. கைப்பந்தாட்ட விளையாட்டில் பல்வேறு தேர்ந்த நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வலைக்கு மேல் பந்தை நிறுத்தி மேலெழும்பி தாக்கி அடித்தல், மேலெழும்பி வலைக்கு மேலேயே பந்தை தடுத்து திருப்பி அனுப்புதல், அடுத்தவருக்கு பந்தைக் கடத்துதல், தாக்குவதற்கு தோதாக பந்தை தலைக்கு மேலே உயர்த்திக் கொடுத்தல், தனிச்சிறப்பு ஆட்டக்காரருக்கு ஏற்றபடி இடம் அமைத்துக் கொடுத்தல், போன்ற ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu