தஞ்சை மாவட்டம், வாட்டாகுடியில், விவசாயிகளுக்கான திட்ட செயலாக்க குழு கூட்டம்
திட்ட பயனாளி ஒருவருக்கு சான்று வழங்கும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, அருகில் வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்யநாதன்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தஞ்சை மாவட்டம், வாட்டாகுடி பஞ்சாயத்தில், திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தலைமை தாங்கினார். வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் வாட்டாகுடி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அலெக்சாண்டர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கருணாநிதி, கோவிந்தராஜ் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகளும் கலந்து கொண்டனர் .இத் திட்டம் வேளாண் துறை உள்ளிட்ட 16 துறைகளை ஒருங்கிணைத்து, உதவி வேளாண்மை அலுவலர், ஒருங்கிணைப்பு அலுவலர் ஆக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது? எவ்வாறு அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது போன்ற விவரங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கி கூறினார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களும், விவசாய நில ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், வங்கி கணக்கு மற்றும் ரேஷன் கார்டு நகலுடன் விவசாயிகள் கையொப்பமிட்டு ஒப்படைப்பது குறித்து வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் எடுத்துக் கூறினார்.
விவசாயிகள் தங்கள் தற்சார்பு அடையும் வகைகளிலும் அனைத்து வகையிலும் தங்களுடைய பஞ்சாயத்தின் முன்னேற்றத்திற்கு தேவையானவைகளை கருத்துருவாக வழங்கிட கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு வரப்பில் உளுந்து சாகுபடி செய்யவும் மற்றும் கை தெளிப்பான்கள் விசைத் தெளிப்பான்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது பற்றியும் அதற்கான விபரங்களைப் பற்றியும் வேளாண் உதவி இயக்குனர் எடுத்துக்கூறி உரிய பயனாளிகளை தேர்வு செய்து தருமாறு செயலாக்க குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
கூட்டம் வாட்டாகுடி முருகன் கோவிலில் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதிக அளவில் கடப்பாரை, மண்வெட்டி போன்ற விவசாய கருவிகளையும் கைத்தொழில்கள் மற்றும் உளுந்து விதைகள் காலத்தை தங்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
தென்னை வைத்துள்ள விவசாயிகள் தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம் மற்றும் கொப்பரைகளை காயவைக்கும் சூரிய உலர்த்தி களையும் தங்களுக்கு மானியத்தில் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அலெக்சாண்டர் தென்னந்தோப்பில் தழைச்சத்து உரத்தை தேவையை குறைக்கும் வகையில் அனைத்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் 50 சத மானியத்தில் வழங்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.விவசாய குழு உறுப்பினர்கள் வாட்டாகுடி கிராமத்திலிருந்து வாட்டாகுடிஉக்கடை வரையிலான சாலையை சீர் செய்து விவசாயிகளுக்கு தரமான போக்குவரத்து ஏற்படுத்தித்தர தீர்மானம் வைத்தனர்.
விடுபட்ட விவசாயிகளுக்கும் விவரம் தெரிவித்து விடுபாடு இன்றி விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றம் செய்திட வேளாண் உதவி இயக்குனர் செயலாக்க குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை. வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மெய்யநாதன் செய்திருந்தார். வேப்பங்குளம் வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் கலந்து கொண்ட விவசாய உறுப்பினர்களுக்கு நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu