நெற் பயிரில் குலை நோய் தாக்குததலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
நெற் பயிரில் குலை நோய் தாக்குததலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் பெரிய கோட்டை, கன்னியாகுறிச்சி, களிச்சான் கோட்டை மற்றும் பாவோஜி ரகுராம சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெற் பயிர்களில் தற்போது குலை நோயின் தாக்குதல் தென்படுகிறது. தற்போது வானிலை மேகமூட்டமாகவும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால் குலை நோய் தாக்குதல் அதிக அளவில் தென்படுகிறது.
இது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்ததாவது:
நெல்லின் அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் குலை நோய் நெற்பயிரை தாக்குகிறது. குறிப்பாக தாளடி நடவு செய்துள்ள நெல் வயல்களில் 55 நாள் முதல் 60 நாள் ஆன பயிர்களில் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இலைகளில் கண்வடிவப் புள்ளிகள் முதலில் தோன்றி பின் ஒருங்கிணைந்து இலையின் ஓரம் காய்ந்து காணப்படும். அதிகளவில் பாதிக்கும் போது பயிர் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். நெல்லின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும் போது கழுத்து பகுதி கருப்பாக மாறிவிடும்.கதிர்கள் ஒடிந்து விடும்.
கணுக்களை தாக்கும் பொழுது கருப்பு நிறமாக மாறி கணுக்கள் உடைந்து விடும். இந்நோயினை கட்டுப்படுத்த விவசாயிகள் ட்ரை சைக்ளசோல் 75 டபிள்யூ பி .120 கிராம் அல்லது அசொஸ்க் சிட்ரோபின் 23 எஸ்பி 200 மிலி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 20லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு பேங்குக்கு ஒரு லிட்டர் கரைசல் 9 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து மாவுக்கு ஏழு டேங்கு விதம் 10 லிட்டர் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் .
இதன் மூலம் இத்தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்தலாம். இதனை கன்னியாகுறிச்சியை சேர்ந்த 25 விவசாயிகளுக்கு வயல்வெளியில் நோய் தாக்குதல்களை எவ்வாறு கண்டறிவது அதற்கான கட்டுப்பாடு முறைகள் வருமுன் காப்பதற்கான இயற்கை முறைகள் போன்றவை பற்றி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு ஆகியோர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்ற வயல்வெளிப் பள்ளியில் விளக்கி கூறினர்.
வயல்வெளி பள்ளியின் முடிவில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கும் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளுக்கான கையேடு கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் மூலம் வழங்கப்பட்டது. காலத்தே கவனிக்காத பயிர் களத்துக்கு நெல்லை கொண்டு வராது. எனவே விவசாயிகள் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலின் தன்மை அறிந்து நெல் மகசூலை பாதிக்கும் நிலை அறிந்து ஏற்ற காலத்தில் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu