தென்காசி மாவட்டத்தில் மழையால் 40 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் மழையால் 40 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
X

மழையால் பாதிப்படைந்த வயல்வெளிகளை படத்தில் காணலாம்.

தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 40 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் தற்போது குமரிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் போது குண்டாறு அணை பாசனத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நெற்கதிர்கள் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையின் பாசனத்தின் கீழ் மூன்று வாய்க்கால், இரட்டை குளம், கீழப்புதூர், தென்னூர் மற்றும் மேலப்புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய காரணத்தால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். விதை நெல், உரம், விவசாய வேலையாட்கள் கூலி என ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர்.

போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு பயிரை வளர்த்துள்ளனர். நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமானது.

ஏக்கர் ஒன்றுக்கு 35 முதல் 40 வரையிலான நெல் மூடைகள் கிடைக்க வேண்டும். மழையினால் நெற்கதிர்கள் அனைத்தும் தலை சாய்ந்து மீண்டும் முளைக்க துவங்கியுள்ளது. மேலும் வயலில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அறுவடை செய்ய விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தற்போது வரை 15 முதல் 20 வரையிலான மூடைகளே கிடைப்பதால் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!