தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக உள்ளதா? (ஒரு சிறிய ஆய்வு)
முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளாக சில உறுதிகளை கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதிகள் தொலைநோக்கு பார்வையுடையவை. அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
முதலமைச்சர் ஆனதும் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை அவர் நிறைவேற்றியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறாத விஷயங்களையும் செய்துள்ளார். அது பாராட்டத்தக்கது. மாநிலத்தின் மோசமான நிதிநிலையை கருத்தில் கொண்டு சில வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பதவியேற்ற பின்னர் கூறியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனெனில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிதி நிலவரத்தின் கலவரமான உண்மை புரிந்தது.
நிதிநிலை :
தமிழக நிதி அமைச்சர் ஒரு முழுமையான பகுப்பாய்வு செய்து சட்டசபையில் ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலையை கருத்தில்கொண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வர சில கால அவகாசம் தேவைப்படும் என்பதும் நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும், ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் சரியானதல்ல.
வளர்ச்சிக்குத் தடை :
சிலர் நீட் விலக்கை கூறலாம். தாமதத்துக்குக் காரணம் தமிழக ஆளுநர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதன்மூலமாக ஆளுநர் தனது அரசியலமைப்பு கடமைகளை மீறுகிறார் என்பதை சராசரி மக்கள் கூட புரிந்துகொள்வார்கள். எதிர்க்கட்சிகள் சில முட்டுக்கட்டைகளைப் போட்டு அரசை ஸ்தம்பிக்க முயற்சி செய்வதும் தெரிகிறது. உதாரணம் தஞ்சாவூர் சிறுமி தற்கொலை. இவைகள் தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கச் செய்யும் எதிர்ப்பு அலைகள்.
அரசு நிர்வாகம் :
அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திறமையானவர்களை நியமித்து அவரே முன்னின்று வழி காட்டுகிறார். உதாரணம் சென்னை மழை வெள்ளம். அதேபோல கோவிட்-க்கு எதிரான மேலாண்மை நடவடிக்கை பெரும்பாலும் வெற்றிகரமாகவே உள்ளது. அவரது கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, சொந்த கட்சியினர் என்று விட்டுவைப்பதில்லை. அதிலும் அவர் ஸ்கோர் செய்கிறார்.
கொள்கை :
சித்தாந்த ரீதியாகவும் ஸ்டாலின் நன்றாக முன்னேறி வருகிறார். நீட் எதிர்ப்பு, கோயில் சீர்திருத்தம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் இரு மொழிக் கொள்கை போன்றவைகளில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கோவில் அர்ச்சகர்கள் நியமனம், குறவர் சமூகம் உட்பட அனைவரும் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிப்பது என எதுவாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சரின் சமத்துவ நோக்கம் நிறைவேறியிருப்பதை நாம் அறியலாம்.
தமிழகம் பெரும்பாலும் வகுப்புவாத சக்திகளிடம் இருந்து தப்பித்துள்ளது. ஆனாலும் தவிர்க்கமுடியாத சூழல்களில் உருவாகும் வகுப்புவாத பிரச்சனைகளை, சமூக நல்லிணக்கத்தை பாதிக்காதவாறு முதலமைச்சர் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அவைகளை ஒடுக்க செயல்படுவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொலைநோக்குப் பார்வை :
ஒரு மாநிலம் எல்லா துறைகளிலும் வெற்றிப்பாதையில் செல்லவேண்டும் என்றால் அரசின் தொலைநோக்கு பார்வைதான் முக்கியம். அரசு தீட்டும் திட்டங்களை பார்க்கும்போது மாநிலத்தின் மீது அவருக்கு இருக்கும் தொலைநோக்கு பார்வை தெரிகிறது. அவர் சிறந்த முதல்வர் என்று பெயர் எடுத்ததற்கு காரணமே நமது மாநிலத்தைவிட வளர்ச்சி குன்றிய மாநிலங்களைக்காட்டி அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. வளர்ந்த மாநிலங்களை சுட்டிக்காட்டி அதனைக்காட்டிலும் நாம் உயர்வடைய வேண்டும் என்ற நேர்மறை மற்றும் முற்போக்கு சிந்தனைதான் அவரை உயர்த்தியது. சிறப்பாகவே தொடங்கியுள்ளார். முட்டுக்கட்டைகளை சவாலாக எதிர்கொள்கிறார். நிச்சயம் தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என்றே தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu