ஆளுநர் Vs முதல்வர் மோதல் முற்றுகிறது..!!??
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ரவியை திரும்பப்பெற வேண்டும் என்று ஏற்கனவே டி. ஆர். பாலு மக்களவையில் பேசியிருந்த நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஆளுநர் மாளிகை மீதான தமிழக திமுக அரசின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நாகாலாந்தில் இருந்து ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட போதே, போலீஸ் உயர் அதிகாரிகளை தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநராக நியமிப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் அளிப்பதாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி முதன் முதலாக கருத்து வெளியிட்டார். ஆளுநர் ரவி நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவரை திரும்பப்பெற வேண்டுமென திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
அப்போது ஆளும் கட்சி என்ற முறையில் திமுக ஆளுநருக்கு எதிரான எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆளுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து திமுகவின் செயல்பாடுகள் இருக்கும் என அப்போது திமுக சீனியர்கள் தெரிவித்திருந்தனர்.
பதவியேற்ற சில நாட்களிலேயே டிஜிபியை அழைத்து சந்திப்பு என சர்ச்சையை தொடங்கி வைத்தார் ஆளுநர். இந்த நிலையில்தான் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மீண்டும் சபாநாயகருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து உடனடியாக சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி அன்றே ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக சட்டமன்றம். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லாத ஆளுநர், இப்போது வரை அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதா பற்றி வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் ஆளுநரோ இந்த விவகாரம் பற்றி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியதாக ஆளும் தரப்புக்கு தகவல் கிடைத்தது. அப்போது டெல்லியில் இருந்த முதல்வருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர் தமிழக அரசு அதிகாரிகள்.
இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்த போது வெளியான திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை முரசொலியில், குடியரசுத் தலைவரின் பணியை ஆளுநர் மேற்கொள்ள பார்க்கிறாரா என கடுமையான கேள்விகளை கேட்டு தலையங்கம் எழுதப்பட்டது.
இந்த நீட் தேர்வு விலக்கு சட்டம் மசோதா விவகாரத்தில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு விவகாரங்களிலும் ஆளுநர் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் முதல்வருக்கு கிடைத்தன என்கிறார்கள் ஆளுங்கட்சி சீனியர்கள்.
அதாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியை வெளிப்படையாக மாதத்துக்கு இரு முறையாவது சந்தித்து விடுகிறார். இதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஆளுநரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அண்ணாமலை. ஒவ்வொரு முறை ஆளுனரை சந்திக்கும் போதும் அதிகபட்சம் 2 மணி நேரம் வரை இருவரும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி விவாதிக்கிறார்கள்.
முதல்வரின் துபாய் பயணத்துக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது புத்தகத்தை வெளியிடும்படி முதல்வரிடம் தேதி கேட்டுள்ளார். முதல்வரின் தேதி கிடைக்காத நிலையில், உடனடியாக அவர் ஆளுநரை சந்தித்து தனது புத்தகத்தை வெளியிட தேதி கேட்டிருக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் முதல்வரின் துபாய் பயணத்திற்கு முன்பே சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திமுக முக்கியப் பிரமுகர்களின் முதலீடுகள் வெளிநாடுகளுக்கு சென்று உள்ளன என்ற தகவல் அண்ணாமலையிடம் சேர்ந்துள்ளது. சுற்றி வளைத்து பார்த்தால் இந்த தகவல் ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து கசியவிடப்பட்டதாகவே முதல்வருக்கு ரிப்போர்ட் கிடைத்தது.
அமலாக்கத்துறை மூலம் தமிழக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகியோரை வரும் எம்பி தேர்தலுக்கு முன்பு கைது செய்து திமுக மீது ஊழல் முத்திரையை வலுவாக பதிய வைத்து ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்த கணக்கு போட்டு வருகிறார் அண்ணாமலை. இதுபற்றி அவர் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.
அமைச்சர்களை கைது செய்யவேண்டுமென்றால் ஆளுநரின் அனுமதி தேவை. சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதாவின் மீது ஊழல் புகார்களை சுப்பிரமணியசாமி ஆளுநரிடம் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு ஆளுநர் சென்னாரெட்டி அனுமதி கொடுத்தார். அந்த அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுத்து ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆளும் தரப்புக்கு தகவல்கள் சென்றுள்ளன.
இந்தப் பின்னணியில்தான் தமிழக ஆளுநர் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். "இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி, ஆளுநர் தனக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்ய தவறுகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். நீட் தேர்வு ரத்து உட்பட மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இதுகுறித்து விவாதிக்க வேண்டும்' என டி.ஆர்.பாலு குறிப்பிட்டு நோட்டீசை தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநருடன் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் விரோதமும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் தான் ஏப்ரல் 3ஆம் தேதி ஆளுநரின் பிறந்தநாளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேநேரம் அரசியல் அடிப்படையில் ஆளுநரை தீவிரமாக எதிர்ப்பதற்கு மட்டுமல்ல, அவரை தமிழகத்திலிருந்து மாற்றுவதற்கும் திமுக தயாராக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த நோட்டீஸ் என்கிறார்கள்.
மக்களவை சபாநாயகர் இதற்கு அனுமதி தரவில்லை என்றால் தொடர்ந்தும் முயற்சிப்பது என்றும் அடுத்தது குடியரசுத் தலைவரை சந்திப்பது என்றும் திமுக முடிவு செய்துள்ளது. ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான இந்த ஆட்டம் தீவிரமடைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu