கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
பைல் படம்
கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக 12/3/2023 -அன்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி. 12 -2023 -அன்று சென்னையில் நடந்த மாநில செயற்குழுவின் முடிவுப்படி அரசாணை- 293 அமல்படுத்துதல், அரசாணை- 225 திருத்தம் செய்தல், காப்பீட்டு(இன்சூரன்ஸ்) குறியீடுகள் அகற்றுதல், தாய் சேய் இறப்பு தணிக்கை அரசாணை - 389 படி நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை சங்கம் அறிவித்திருந்தது இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 27 -ல் சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைசெயலர் மற்றும் துறை இயக்குனர்கள் ஆகியோர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சு வார்த்தையில், அரசாணை 389 -ன் படி MATERNAL DEATH AUDIT நடத்த ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசாணை 225 -ஐ மாறுதல்கள் செய்து விரைவில் திருத்தப்பட்ட அரசாணை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், காப்பீடு குறியீடுகள் நிறைவேற்ற கோரி மருத்துவர்கள் நிர்ப்பந்தப்படுத்தபட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார். தமிழக முதலமைச்சரால் 21 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட அரசாணை 293-ஐ அமல்படுத்த தனி நபர் விருப்பத்தை அனைத்து அரசு டாக்டர்களிடம் பெற்று விருப்பப்படும் மருத்துவர்களுக்கு அரசாணை 293 நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், இதுவரை அதற்கான எந்தவித ஆணையோ, நடவடிக்கைகளோ அரசு தரப்பில் எடுக்கப்படாததால் 12/3/2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழுக் கூட்டத்தில் பின் வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஏற்கெனவே முடிவு செய்திருந்த போராட்ட அறிவிப்புகளை மாற்றி கீழ்கண்ட போராட்டங் களை நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 23/3/2023 அன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்துவது. இந்தப் போராட்டத்தில் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்வது. அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 29/3/2023 அன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஒருநாள் (OP BOYCOTT ) வெளி நோயாளிகள் பிரிவு சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது.
அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேறு வழி இன்றி உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் முதல்வரால் வழங்கப்பட்ட அரசாணை 293 -ஐ , 21 மாதங்களாக காலதாமதப்படுத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, 5/4/2023 - அன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள், தலைமை மருத்துவமனைகள், பிற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவர்களும் ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு (MASS CASUAL லீவு) போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் ஏதோ ஒரு சில மருத்துவர்கள் கூறுவதை கருத்தில் கொண்டு கடந்த 21 மாதங்களாக அரசாணையை நிறுத்தி வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு செய்வது வேண்டுமென்றே அங்கீகரிக்கப்படாத ஒரு சில நபர்களை தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்திற்கு எதிராக ஊக்குவிப்பதற்காக செய்யப்படும் நடவடிக்கையோ என்ற வருத்தத்தை மாநில செயற்குழு தெரிவிக்கிறது. எனவே அமைச்சர் உண்மையை புரிந்து கொண்டு விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu