'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி I

தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?   நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி I
X

கட்டுரையாளர் நீச்சல்காரன்.

தமிழக அரசின் இணையத் தளங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை விளக்கும் சிறப்புக்கட்டுரை.

அண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப்பாடலாக தமிழக அரசு அறிவித்தது. அதில் குறிப்பிட்டவாறு "எத்திசையும் புகழ்மணக்க" தமிழைப் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும். குறிப்பாக அரசின் கணினித் தமிழ் பயன்பாட்டில் மெனக்கெட வேண்டியவை பல உள்ளன. தமிழக அரசின் இணையத்தளங்களில் தமிழ்ப் பயன்பாடு, அரசின் தளங்களின் நவீனமயமாக்கல், பொதுத் தகவல் உரிமப் பயன்பாடு என்று இணையப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு இத்தொடர் கொண்டு வருகிறது.

ஆங்கிலத்தில் இணையத்தளம் :

சுமார் முந்நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் தமிழக அரசின்கீழ் உள்ளன. பொதுவாக முக்கியத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையமும் மற்ற தளங்களை எல்லாம் அந்தந்தத் துறையினரும் நிர்வகிக்கின்றனர். இவற்றுள் தமிழ் இடைமுகம் கொண்ட இணையத்தளங்கள் என்று கணக்கில் கொண்டால் அவை 40 சதவிதத்திற்கும் கீழே தான் உள்ளன. அதாவது 60% தளங்களில் ஆங்கிலம் மட்டுமே இருக்கும், தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால் பயன்படுத்தவே முடியாது. அரசு ஆவணங்கள், பெயர்ப் பலகை, திட்டங்கள் என்று தமிழில் அரசு பெயர்வைத்தாலும் இணையத்தளம் என்று வரும் போது தமிழ் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் கூட தமிழ் இல்லை :

தமிழகத்தின் 38 மாவட்டங்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவானதால் தமிழில் இடைமுகம் கொண்டதாக இருக்கின்றன. ஆனால், தமிழக அரசு உருவாக்கிய மாநகராட்சி இணையத்தளங்களில் சென்னையைத் தவிர மற்றவற்றில் எல்லாம் தமிழ் இடைமுகமில்லை. மதுரை, கோவை போன்ற சில மாநகராட்சிகளில் கூகிள் மொழிபெயர்ப்பைப் பெயருக்குச் சேர்த்து பெயரளவில் தமிழ் இருக்கிறது. ஆனால், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் மங்களூரு, தாவண்கரே, பெல்லாரி என அனைத்து மாநகராட்சி இணையத்தளங்களும் கன்னடத்தை முதன்மையாகக் கொண்டுள்ளன. கடைக்கோடி மக்களைச் சென்றடையும் உள்ளாட்சி அமைப்புகளிலேயே தமிழ் புறக்கணிக்கப்படுவது வருந்தத்தக்கதாகும்.

கொரோனா விழிப்புணர்வுதளம் மட்டும் தமிழில் :

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை என்று கொரோனா விழிப்புணர்வு தளத்தைத் தவிர மற்ற சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையத்தளங்கள் தமிழில் இல்லை. ஒவ்வொரு துறைவாரியாகப் பார்த்தால் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், வேலைவாய்ப்புத் தளம், கல்வியுதவித் தொகைத் தளம் எனச் சராசரி நபர்கள் பயன்படுத்தும் தளங்களில் எல்லாம் தமிழ் இடைமுகம் இல்லை.

ரேஷன் பொருட்கள் குறுஞ்செய்தி தமிழில் இல்லை : யாருக்கு இணையத்தளம்?

நல்வாய்ப்பாகத் தகவல்தொழில்நுட்பத் துறையின் அநேக தளங்களும் தமிழில் உள்ளன. பொது விநியோகக் கடையில் அனுப்பப்படும் ரசீது குறுஞ்செய்தியில் பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அது போல கோ ஆப் டெக்ஸ், காதிகிராப்ட், டாம்ப்கால் போன்ற மின் வணிகத் தளங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. ஆவின், டாஸ்மாக் போன்று பெரியவர்களுக்கான தளங்களானாலும் ஊட்டி மலர் தோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா என்று குழந்தைகள் விரும்பும் சுற்றுலா இணையத்தளங்களானாலும் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. நமது பாமர மக்கள் பலனடையே உருவான இந்தத் தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் இடைமுகத்தை வைத்து யாருக்குப் பயன்படும் என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் விற்பனை முனையங்களில் தமிழ் இருப்பதும் வணிகத்தில் தமிழைப் பயன்படுத்துவதும் தமிழுக்கான பொருளாதார மதிப்பைக் கூட்டும். மேலும் தனியார் மின் வணிகத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும்.

தமிழ்நாட்டு இணையத் தளங்களில் தமிழைக் கட்டாயப் படுத்தலாமே :

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், அரசு ரப்பர் கழகம் போன்று பெரும்பாலன வனத்துறை தளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழ்நாடு மின்சார உரிமம் வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்ற மின்சாரத்துறைத் தளங்களில் தமிழ் இல்லை. டைடல் பூங்கா, சிப்காட் உட்படப் பெரும்பாலான தொழில்துறையைச் சேர்ந்த தளங்களில் தமிழ் கொஞ்சமும் இல்லை. அரசுப் பணிக்குத் தமிழில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் போல தமிழ்நாட்டுத் தளங்களில் தமிழைக் கட்டாயப் படுத்தலாம்.

உயர் கல்வித்துறையில் தமிழை காணோம் :

வருங்காலத் தலைமுறையினரிடம் தமிழைக் கடத்துவது பள்ளிக் கல்வியே. அந்தப் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியத் தளங்களில் தமிழ் இடைமுகமிருந்தாலும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுகள் இயக்குநரகம், இணையவழிக் கல்வி போன்றவற்றின் தளங்களில் தமிழில்லை. உயர்கல்வி நிலையங்களில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைத் தவிர ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் தமிழைக் காணமுடியவில்லை.

பிற மாநில பல்கலைக்கழகங்களில் தாய்மொழியில் இணையத்தளம் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உட்பட ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் தமிழ் இடைமுகமில்லாமல் உள்ளன. வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற தளங்களில் சில செய்திகள் தமிழிலிருந்தாலும் தளத்தின் இடைமுகம் ஆங்கிலத்திலேயே உள்ளன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக் கழகம், கண்ணூர் பல்கலைக் கழகம் என்று பெரும்பாலான அரசு பல்கலைக் கழகங்கள் அவர்கள் தாய் மொழியில் தான் இணையத்தளத்தைக் கொண்டுள்ளனர் என்பது நமதரசு கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

செம்மொழிக்கு வந்த சோதனை :

ஒரு பல்கலைக் கழகம் தான் வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் அறிவுக்கூடம். அங்கேயே தமிழை நிறுத்தாமல் தமிழில் பெயர் வைத்தால் சலுகை, தமிழ் எழுத்துக்களுக்குச் சிலை, தமிழன்னைக்கு சிலை என்று செய்துவருகிறோம். மத்திய அரசின் கல்வி நிலையங்களின் இணையத்தளமே தமிழிலும் வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளே தங்கள் தளத்தைத் தமிழில் வெளியிடாமல் இருப்பது செம்மொழிக்கு வந்த சோதனை. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உட்பட பல்வேறு தேர்வு நடத்தும் அமைப்புகளின் தளங்களிலும் தமிழ் இடைமுகம் இல்லை. அதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

தாய்த் தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாமா?

எனவே, வளரும் இணையப் பயன்பாட்டையும் எண்ணிமத் தகவல் பரிமாற்றத்தையும் கருத்தில் கொண்டு கணினிப் பயன்பாட்டில் தமிழை உறுதி செய்ய வேண்டும். சிங்கப்பூர், இலங்கை, கனடா போன்ற நாடுகளில்கூட தமிழ் இடைமுகத்தைக் கொண்டிருக்கும் போது தாய்த் தமிழ் நாட்டில் இல்லாமல் இருக்கலாமா என்பதை அனைவரும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்கவேண்டும், அதைச் செயல்பட்டில் கொண்டு வர வேண்டும்.

(இன்னும் வரும்)

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!