'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி III

தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?   நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி III
X

முந்தைய தொடர்களில் தமிழ்ப் பயன்பாடு, நவீனமயமாக்கல் குறித்து பார்த்தோம் இதில் தரவுகள் குறித்து பார்ப்போம்.

தரவுகள் அறிதல் :

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு தரவுகளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவார்கள். அரசு அலுவலகம் சென்று ஒரு தரவினைப் பார்ப்பதை விட இணையத்தில் அதைப் பார்ப்பது எளிது. அந்த வசதியை எல்லாத் துறையிலும் செய்ய வேண்டும். ஏற்கனவே வருவாய்த் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை என்று குறிப்பிட்ட சில துறையில் தங்களது தரவுகளை இணையத்தில் சரிபார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது வரவேற்பிற்குரியது.

மக்கள் தேடும் தகவல்கள் :

அதுபோல போக்குவரத்துத்துறை, சட்டத்துறை, ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை போன்ற துறைகளில் மக்கள் தேடும் தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். மதுரையைத் தவிர வேறு போக்குவரத்துக் கோட்டங்களில் பேருந்து வழித்தடம், போருந்துகளின் அட்டவணை போன்றவை இணையத்தில் இருப்பதில்லை. நெல் கொள்முதலுக்கு tncsc-edpc.in மட்டுமே உள்ளது. வேளாண் கொள்முதல் நிலையங்கள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள், மானிய விவரங்கள், வேளாண் பரிந்துரைகள் என்று கேரள வேளாண்துறை போல தகவல்களை அளிக்கலாம். தமிழில் சட்ட நூல்கள் இணையத்தில் கிடைப்பதே இல்லை. இதுவரை தமிழ்ச் சட்டசபையில் நிறைவேற்றிய கட்டங்களின் தொகுப்பை இணையத்தில் தமிழில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இணையத்தில் "தமிழரசு" வரவேண்டும் :

"தமிழரசு" என்ற தமிழக அரசின் அலுவல்பூர்வ மாத இதழ் அச்சில் மட்டுமே வருகிறது இணையத்தில் வெளிவருவதில்லை மேலும் அரசின் இதழைக் கட்டணம் கட்டியே மக்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. குறைந்தபட்சம் இணையத்தில் இலவசமாகவும், அச்சில் விலை வைத்தும் கொடுக்கலாம். சொல்வயல், திருக்கோயில், தமிழ்நாடு நுகர்வோர் கவசம் போன்ற சில மின்னூல்களை அரசுத் துறையினர் தொடர்ந்து வெளியிடுவது பாராட்டுக்குரியது. அவற்றை பிடிஎப் வடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் வெளியிட்டால் இணைய வளம் பெருகும். காகிதநூல்களை எவ்வாறு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கிறோமோ அதுபோல இணையத்தில் மின்னணுக் காப்பகத்தை(digital archive) அண்ணா நினைவு நூலகத்தின் சார்பாக உருவாக்கலாம். ஒரு நூல் அச்சாகும் போது நூலகத்திற்கு ஒரு பிரதி வாங்குவது போல ஒரு மின்னூலையும் வாங்கி இணையத்தில் மக்கள் படிக்க வழி செய்யலாம்.

எழுத்தாளர்களின் பங்களிப்புகள் ஆவணப்படுத்தப்படவேண்டும் :

தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிலை வைப்பதற்கு இணையாக அவர்கள் பங்களிப்பை ஆவணப்படுத்த வேண்டும். சாகித்திய அகாதெமி விருதுகள், குடியரசுத் தலைவர் விருதுகள் என்று அனைத்து விருதாளர்களையும் இணையத்தில் ஆவணப்படுத்தி இந்திய அரசு அங்கீகரிக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை விருது பெற்ற தமிழ் ஆளுமைகளின் பட்டியல் பொதுவிலும் இல்லை இணையத்திலும் இல்லை. இது விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தமிழ் ஆளுமைகள் குறித்த ஆவணப்படுத்தல் வேண்டிய நேரமிது. பெரியாரது எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து இதுவரை நாட்டுடைமையான ஆசிரியர்களின் நூல்களை எல்லாம் இணையத்தில் ஆவணப்படுத்தும் வரை செய்யவேண்டிய பணிகள் ஏராளம்.

தரவுப் பயன்பாடு:

பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் அரசுத் தளங்களெல்லாம் பகிர்வுரிமை கொண்டவையாக இருக்கும். அதாவது, அதன் உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளலாம், பயன்படுத்தலாம் என்ற சட்டரீதியான அறிவிப்பை இட்டிருப்பார்கள். இந்தியாவில் பொதுத் தகவல் உரிமச் சட்டம்(GODL) நடைமுறையில் உள்ளது. அதாவது அரசின் தரவுகள் அனைத்தும் பொதுவுரிமத்தில் வெளியிடவேண்டும். அதே போல தமிழ்நாட்டில் 2016 இல் வெளிவந்த அரசாணை 105 இன் படி தமிழ் வளர்ச்சிக்கான வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் தமிழ் இணைய நூலகம் என்ற அருமையான திட்டப் பக்கத்தின் கீழ் காப்புரிமை அறிவிப்பு இடப்பட்டுள்ளது. இது போல சொற்குவை, தகவலாற்றுப்படை போன்ற அரசின் அருமையான திட்டங்களின் தரவுகளை எளிதில் பயன்படுத்திட முடியாமல் காப்புரிமை இட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளைப் போல பகிர்வுரிமை அறிவிப்பு கொண்ட எந்த அரசு இணையத்தளத்தையும் தமிழ்நாட்டில் காணமுடியவில்லை. இதனால் விக்கிமூலம் போன்று சர்வதேசக் களஞ்சியங்களில் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கலுள்ளது. எனவே மக்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகைசெய்யும் படைப்பாக்கப் பொதுவுரிமையை இயன்றவரை அனைத்து அரசுத் தளங்களிலும் வெளியிடவேண்டும்.

பாதுகாப்பற்ற தனியார் மின்னஞ்சல் முகவரி :

சிறைத்துறை, போக்குவரத்துத் துறை, வேளாண் விற்பனைத் துறை என்று பல்வேறு துறைகளில் தொடர்பு முகவரியாக ஜிமெயில் அல்லது யாஹூ முகவரிகளைப் பார்க்கமுடிகிறது. அண்மையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் வழங்கப்படும் என்று அரசாணை வெளிவந்தது. அது சிறப்பான அறிவிப்பே, அது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அரசுத் துறையினர் அனைவருக்கும் இதனை வழங்கவேண்டும். எந்தளவிற்குப் பகிர்வுரிமை முக்கியமோ அதே அளவிற்குத் தனியுரிமையும் முக்கியம். டான்சி, கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் போன்ற பல அரசு அமைப்புகளின் தொடர்பு முகவரியாக தனியார் மின்னஞ்சல் முகவரிகள் இருப்பது பாதுகாப்பு குறைபாடு மட்டுமல்ல அலுவல்பூர்வமான அணுகுமுறையும் அல்ல.

முன்னுதாரணமாக இருக்கவேண்டியது கடமை :

இந்திய அளவில் தேசிய மின் ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீடு(NeSDA)என்ற ஒரு தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது வெளியாகும். கடைசியாக 2019 இல் வெளிவந்த இப்பட்டியலில் தமிழகம் 17 ஆவது இடத்தில் இருந்தது. இதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போதும் தமிழகத்தில் மின் ஆளுமை இன்னும் மேம்படவேண்டும் என்பதைக் காட்டுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் இணையப் புரட்சி மேம்பட்டிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் உள்ளதென்பதே இங்கு சுட்டிக் காட்ட விரும்புவது. நாகரீகத்தில் மற்ற இனங்களைவிட தொன்மை கொண்ட நாம் நவீனத்திலும் மற்ற மாநிலங்களைவிட முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

(முற்றும்)

இதையும் படியுங்கள் :

'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி I

'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி II

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil