'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி II

தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?   நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி II
X
தமிழக அரசின் இணையத் தளங்களில் தமிழ் மொழி நவீனமயப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டனவா என்பதை விளக்கும் கட்டுரை.

முந்தைய கட்டுரையில் அரசு இணையத்தளங்களில் தமிழ்ப் பயன்பாடு குறித்து பார்த்தோம். இப்பகுதியில் அவற்றின் நவீனமயமாக்கல் குறித்து பார்க்கலாம்.

அனைவருக்கும் உகந்த இணையம் :

இணையம் என்பது பார்வையுடையவர்களுக்கு மட்டுமல்ல, பார்வை மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவருக்கும் உகந்ததாக இருக்கவேண்டும். அவ்வகையில் இணையப் பக்கங்களும் இணைய கோப்புகளும் பார்வை குறைபாடு உடையவர்களும் அணுகும் வகையில் மேம்படுத்தப்படவேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா நன்கொடை தளம் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக இல்லை என்று ஒரு கடிதத்தைப் பார்வையற்ற கல்லூரி மாணவர் பட்டதாரிகள் சங்கம் அரசிற்கு எழுதினர்.

செலவில்லாத தொழில்நுட்பம் :

இது பொதுச் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டிக் காட்டியது. நமது நாட்டில் கட்டிடங்களிலும், அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பக் கட்டிடங்கள் அமைய வேண்டும் என்ற உரிமையை கூட நீதிமன்றங்களின் தலையீட்டில் தான் பெற்று வருகின்றனர். அதுபோல அல்லாமல் இயல்பாகவே அரசின் ஒவ்வொரு தளமும் பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். இந்திய அரசின் தகவலியல் மையம் உருவாக்கிய தளங்களில் இவ்வசதி பெரும்பாலும் இருக்கும். குறிப்பாக மாவட்ட இணையத்தளங்களில் இதைக் காணலாம். இதற்காகவே சர்வதேச அளவில் வலைச் சேர்த்தியம்(W3C) பல நுட்ப வழிகாட்டலை வழங்கியுள்ளது. அவற்றைச் செயல்படுத்தினாலே பெரும் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு முறையான பண்புகளுடன் தள வடிவமைப்பு, திரைபடிப்பான், ஒலி வடிவ கேப்சா, ஒளிப்படங்களில் அல்ட் விவரிப்பு போன்று வசதிகளை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் திரைபடிப்பான் இருந்தால் தளத்தினைக் கணினியே படித்துக் காட்டச் சொல்லிக் கேட்கமுடியும். தொழில்நுட்பம் கொடுத்த இந்த வசதியை செலவில்லாமல் செயல்படுத்தவும் இயலும்.

ஒருங்குறி நுட்பம் :

உலக அளவில் ஒவ்வொரு மொழி எழுத்துக்களும் இணையத்தில் அனைவருக்கும் சீராக தெரிவதற்காக ஒருங்குறி என்ற ஒரு நுட்பம் உள்ளது. அந்த ஒருங்குறி பயன்பாட்டைப் பின்பற்ற தமிழ் நாட்டில் அரசாணை வெளிவந்து பத்தாண்டுகளாகியும் தமிழக அரசின் ஆவணங்கள் பெரும்பாலும் ஒருங்குறியில் இல்லை. சில மாதங்களாக அரசு சில முயற்சிகள் எடுத்து வந்தாலும் ஒருங்குறி பயன்பாட்டை உறுதி செய்யவில்லை. முக்கியமாக அரசின் செய்திக் குறிப்புகள் எல்லாம் பிடிஎப் வடிவில் படமாகவே வெளிவருகின்றன. கூகிள் உட்பட எந்தத் தேடலிலும் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள் பட்டியலாவதில்லை. ஆனால் இந்திய அரசின் செய்திக் குறிப்புகள் எல்லாம் ஒருங்குறியில் பல இந்திய மொழிகளில் வெளிவருவதால் அவை கூகிளில் பட்டியலாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். tahdco.tn.gov.in மற்றும் consumer.tn.gov.in ஆகிய இரு தளத்தில் இன்னும் தமிழ் ஒருங்குறி இல்லாத தமிழே இணையத்தில் உள்ளது.

நகராட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கும் இணையப்பக்கம் :

தமிழகத்தில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய எழு மாநகராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே இணையத்தளம் உள்ளது. மற்ற மாநகராட்சிகளுக்கு இணையத்தளத்தை உருவாக்கி முழுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சட்டத்துறைக்கான இணையத்தளத்தைத் தவிர இதர துறைகளுக்கான தனி இணையத்தளங்கள் உள்ளன. உலகம் முழுக்க இந்தப் பெருந்தொற்றுக் காலம் கணினிமயத்தை இன்றியமையாததாக மாற்றிவிட்டது. அரசின் நிர்வாகமும் நலத்திட்டங்களும் இணையத்தைத் தவிர்த்துச் செயல்படுத்தவே முடியாத நிலையடைந்துவிட்டது. பொதுவிநியோகம், பள்ளிக்கல்வித் துறை, இந்து சமய அறநிலையத்துறை எனப் பல துறைகள் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவது வரவேற்பிற்குரியது. நேரடியாக மக்களை அடையும் துறைகளான மின்சாரத் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளில் நவீன இணைய நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்பதால் அனைத்து நகராட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கும் இணையப்பக்கத்தையாவது உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த மேலாண்மை :

ஒவ்வொரு இணையத்தளத்தையும் திறக்கும் போது அதன் http அல்லது https இரு வகை புரோட்டோகால்களைப் பார்த்திருப்போம். அதில் https என்பது பாதுகாப்பான பரிவர்த்தனை செய்ய உதவும். ஆனால் http://www.scdrc.tn.gov.in/ http://www.landreforms.tn.gov.in http://www.coopelection.tn.gov.in/ போன்று சுமார் ஐம்பது அரசு தளங்களில் http மட்டுமே உள்ளது. இதனால் தகவல் திருட்டு நிகழ வாய்ப்புள்ளது. சமீபத்தில் கோட்டூர்புரத்தில் சூழ்ந்த வெள்ளத்தால் தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தளம் சில நாட்கள் செயல்படாமல் இருந்தது. bcmbcmw.tn.gov.in, tamilship.com, www.tnphc.com, www.tnlegalservices.tn.gov.in போன்ற தளங்களில் அரசின் தளங்களிலேயே மிகவும் மோசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மத்திய அரசின் அனைத்து இணையத்தளங்களும் தேசிய தகவலியல் மையத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதில் ஒரே மாதிரியான தரத்தைப் பேண முடிகிறது. அது போல இத்தகைய இடையூறுகளை நீக்கி ஒருங்கிணைந்த மேலாண்மை செய்து மின்னிலக்க உலகில் தமிழக அரசின் தளங்கள் மேம்பட வேண்டும்.

சேவைச்செயலிகள் :

பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மைத் தகவல் மையமும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மின் ஆளுமை இயக்குநகரமும் அதிகமான குறுஞ்செயலிகளை வெளியிட்டுள்ளனர். இது போல மற்ற துறைகளும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளைச்செயலிகளாகக் கொடுக்கலாம். 'மொபைல் பிரண்டிலி' எனப்படும் கைப்பேசி ஒத்திசைவு என்பது நவீன தளங்களின் அடிப்படைப் பண்பு. அவ்வகையில் தமிழக அரசின் பெரும்பாலான இணையத்தளங்கள் கைப்பேசிக்கு உகந்ததாக இல்லை. சுமார் ஐம்பது கைப்பேசி செயலிகள் தனியாக வெளியிட்டிருந்தாலும் அவை குறிப்பிட்ட சில திட்டங்கள் சார்ந்தும், தேவை சார்ந்தும் மட்டுமே உள்ளன. பொதுவாக இணையத்தில் கிடைக்க வேண்டிய தகவல்களைப் பெற இணையத்தளத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

கைப்பேசி ஒத்திசைவு இல்லாத tn.gov.in தளம் :

தென்னிந்திய மாநிலங்களில் தமிழக அரசின் tn.gov.in தளம் மட்டுமே கைப்பேசி ஒத்திசைவு இல்லாதது என்பது கூடுதல் செய்தி. எனவே, இவ்வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும். கேரளம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி அரசுகளின் இணையத்தளம் கைப்பேசிகளில் சிறப்பாகத் திறக்கின்றன. கர்நாடக, தமிழக அரசுகளின் இணையத்தளம் மட்டுமே இவற்றுள் தேடுபொறி உவப்பாக்கம்(SEO) சரியாக செய்யவில்லை. தேடு பொறி உவப்பாக்கம் என்றால் கூகிள் உட்பட தேடுபொறிகள் தங்கள் தளத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்தலாகும். இதனால் மக்கள் தேடும் போது அரசின் செய்திகள் கிடைக்கும்.

கூகிளில் கிடைக்காத "மீண்டும் மஞ்சப்பை" :

உதாரணத்திற்கு அண்மையில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி செய்திக் குறிப்பினையும் வெளியிட்டது. ஆனால், அந்த அரசுச் செய்திக் குறிப்பு கூகிளில் தேடினால் கிடைக்காது. பக்கத்து மாநில அரசுகளின் செய்திகளை எல்லாம் கூகிள் காட்டும் போதும் நமது அரசின் செய்திகளை காட்டாமல் இருக்கலாமா? எனவே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நமதரசிற்கு உள்ளது. முக்கியமாகத் தேடல் பெட்டி, தள வரைபடம், திரைபடிப்பான், தேடுபொறி உவப்பாக்கம் போன்றவற்றைப் பின்பற்ற அறிவிப்பினை அளிக்கலாம். எல்லாத் துறைகளிலும் வளர்ந்துள்ள தமிழகம், இணையம் என்ற நுட்பத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும், செழிப்பான வளர்ச்சியும் அடைய வேண்டும்.

(இன்னும் வரும்)

இதையும் படியுங்கள் :

'தமிழக அரசு இணையத் தளங்களின் நிலை என்ன?' நீச்சல்காரன் எழுதும் சிறப்புக் கட்டுரை -பகுதி I

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!