மக்களை பாதிக்கும் போராட்டங்கள் இனி குறையும் என நம்பலாம்..!
தமிழக போக்குவரத்துக்கழக பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் (கோப்பு படம்)
போராட்டம் நடத்துவது தொழிலாளர்களின் உரிமை என்றாலும் அதை பண்டிகைக் காலத்தில் நடத்தியது ஏன் என்ற உயர்நீதிமன்றத்தின் இந்த கேள்வியை அரசு ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் என்ற அறிவிப்பே உறுதிப்படுத்தி உள்ளது. இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவிக்கலாம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். பொங்கல் பண்டிகைக்காலம் இன்று தொடங்குகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் எல்லாமே மிகவும் நியாமானவை தான் என அரசும் ஒத்துக் கொண்டது. மக்களும் ஏற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அவர்கள் தேர்வு செய்த நேரம் தான் அத்தனை பேரையும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது.
(இதைப்போன்ற காலகட்டத்தில் போராட்டம் நடத்தினால்தான் அரசும் செவி சாய்க்கும் என்பது தொழிலாளர்களின் நம்பிக்கையாக இருந்தாலும் மக்களின் பண்டிகைக்கால கஷ்டங்களையும் அவர்கள் உணரவேண்டும்)
பொங்கல் பண்டிகைக்காக நான்கு நாட்கள் வரை விடுமுறை தொடங்கும் நிலையில் மக்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து ஓரிரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதற்காக அரசு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் சிலர் செக் வைத்தனர்.
தங்களது போராட்டங்களை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தனர். இந்த அறிவிப்பு உண்மையிலேயே அரசையும், மக்களையும் கோபப்பட வைத்து விட்டது. நியாயமான கோரிக்கைக்கு போராடினாலும், அதற்கு வேறு நாட்கள் கிடைக்கவில்லையா. மக்களை கேடயமாக பயன்படுத்தியா போராட வேண்டும் என கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மிக, மிக நுட்பமான அணுகுமுறையை கையாண்டனர். அரசை கடுமையாக சாடிய நீதிபதிகள், போக்குவரத்து தொழிற்சங்கத்தினரையும் விட்டு வைக்கவில்லை. உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கலாம். உங்களுக்கு போராடவும் உரிமை உண்டு. அதற்காக மக்கள் திருவிழா கொண்டாட தயாராகும் நேரத்தில், இப்படி ஒரு போராட்டம் தேவையா?
அதுவும் வரும் 19ம் தேதி முதல் பேச்சுவார்த்தையினை தொடங்கலாம் என அரசு உறுதி அளித்துள்ள நிலையிலும், இப்போதுள்ள சூழலில் இந்த போராட்டம் தேவையா? இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை ஏன் உணரவில்லை? என மென்மையான வார்த்தைகளில் கடுமையான சாட்டையடி கொடுத்தனர்.
கோர்ட்டின் நிதர்சன போக்கினையும், மிகவும் நியாயமான உண்மையான அக்கறை கலந்த அணுகுமுறையையும் தாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், இப்போதைக்கு போராட்டத்தை வாபஸ் பெற்று கோர்ட்டை சமாதானம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்பதை போக்குவரத்து தொழிற்சங்கங்களும் நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டு, போராட்ட அறிவிப்பினை வாபஸ் பெற்று கோர்ட்டிலும் தெரிவித்து விட்டனர். கோர்ட்டும் வழக்கினை முடித்து வைத்து போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அரசுக்கும் ஒரு சாட்டையடி கொடுத்துள்ளது.
இந்த வழக்கு பல்வேறு சிக்கல்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. என்ன தான் நியாயமான போராட்டமாக இருந்தாலும், மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பதில் கோர்ட் தெளிவாக உள்ளது என்பதை இந்த வழக்கு புரியவைத்துள்ளது.
இதனை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் புரிந்து கொண்டது போல், அத்தனை அரசு ஊழியர்களும், பிற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். மாறாக கோர்ட் மூலம் மக்கள் நிவாரணம் தேடும் சூழலை உருவாக்கினால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கல் என்பதை இந்த தீர்ப்பு புரிய வைத்துள்ளது. இது மிகுந்த சிறப்பான விஷயம் என சட்ட நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu