சேலம்: காமராஜரின் பிறந்த நாளையொட்டி முதியவர்களை கவுரவித்த ஆசிரியர்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காங்கிரஸ் கட்சியினர், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதுடன், ஏழை எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்கி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா, ஏழை முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன், தனது சொந்த செலவில் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய முதியவர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர், பின்னர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்ட முதியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட காய்கறிகளை ஏழை முதியவர்களுக்கு வழங்கினார்.
நல உதவிகளை பெற்றுக் கொண்ட முதியவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் உட்பட ஆசிரிய பெருமக்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். வித்தியாசமாக காமராஜர் பிறந்தநாளை கொண்டாடிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் செயலை, பலரும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu