சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்!

சேலம் மாநகராட்சி  தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை:  பொதுமக்கள் ஏமாற்றம்!
X

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை காரணமாக, சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் 230 மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல், சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால், தடுப்பூசி பற்றாகுறையால் பெரும்பாலான மையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. தடுப்பூசி இருப்பு இல்லை என்கிற அறிவிப்பு பலகை, பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் காலை முதலே திரளாக படையெடுத்து வந்தனர். அவர்களிடம், பணியில் இருந்த காவலர் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி போடமாட்டாது என சொல்லி திருப்பி அனுப்பினர்.

சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன. இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மீண்டும் மாநகராட்சி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது இப்பணிகள் மீண்டும் தொடங்கும் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!