சேலத்தில் 151 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்

சேலம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 151 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாநகரில் முக்கிய பகுதியாக கருதப்படும் பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 151 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாடுகளை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் உரையாற்றிய அவர், காவல்துறையினர் பொதுமக்களை எளிமையாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக வாகன ரோந்து பணிக்கு மாற்றாக நடைபயண ரோந்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது கண்ணாக கருதப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகள் துப்பு கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ai future project