சேலம் வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலம்

சேலம் வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலம்
X

கணவனை கொலை செய்த ஷாலினி.

சேலத்தில் வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது அம்பலம்.

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் மார்க்கெட் பகுதியில் வசித்து வருபவர் பிரபு. அதே பகுதியில் வாழைஇலை கடை வைத்துள்ள இவர், அவரது சொந்த அக்கா மகள் சாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரபு அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரபுவின் மனைவி ஷாலினி, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தனது கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தனது கணவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் வசித்த இரண்டாம் தளத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததற்கான எவ்வித தடயங்களும் சிக்கவில்லை. அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்ததில் பக்கத்து வீடுகளில் இருந்தும் மர்ம நபர்கள் வீட்டிற்குள் குதித்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் ஷாலினி பக்கம் திரும்பியது.இதையடுத்து ஷாலினியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனிடையே பிரபுவின் உறவினர்கள் ஷாலினி சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு ஆண் நபர்களுடன் பழகி வந்ததாகவும், இதனால் பிரபுவுக்கும் சாலினுக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாகவும் போலீசில் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஷாலினியின் சமூகவலைத்தள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்த போது திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அப்பு என்கிற காமராஜ் என்பவருடன் ஷாலினி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கியது.

இதையடுத்து ஷாலினியிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில் ஷாலினிக்கும் காமராஜுக்கும் இடையே கடந்த 1 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததும், அவ்வபோது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது உல்லாச வாழ்க்கைக்கு கணவர் பிரபு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சம்பவத்தன்று கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தூக்கத்திலேயே தீர்த்து கட்டியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து துறையூர் விரைந்த அம்மாபேட்டை போலீசார் ஷாலினியின் கள்ளக்காதலனை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!