கள்ளத்துப்பாக்கி ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை: மேற்கு மண்டல ஐஜி
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர்.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிமம் இன்றி கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள், தாமாக முன்வந்து அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்றும், மீறி துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அதன்படி சேலம் சரகத்தில் 29 நபர்கள் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மேலும் துப்பாக்கிகளை முன்வந்து ஒப்படைக்காமல் இருந்த 52 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, சேலம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஐ.ஜி சுதாகர் அளித்த பேட்டி: சேலம் சரகத்தில் கடந்த 2 வாரத்தில் 81 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்த 29 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை, துப்பாக்கிகளை ஒப்படைக்காத 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் இந்த துப்பாக்கி வேட்டை இனியும் தொடரும். தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் சரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 528 பேர் மீது 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 88 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 39 நபர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கள்ளத்துப்பாக்கி, கஞ்சா மற்றும் குட்கா புழக்கம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu