மக்களை திசைதிருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு: எடப்பாடி பழனிசாமி

மக்களை திசைதிருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு:  எடப்பாடி பழனிசாமி
X

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களை திசை திருப்பவே மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு மீது அரசு பொய் வழக்கு போடுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளரிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார் ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண் துடைப்புக்காகவே ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களையும் பெற்றோரையும் தொடர்ந்து குழப்பி வருகிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். மின் கணக்கீட்டு முறையில் ஏகப்பட்ட குளறுபடி நடப்பதாக, தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மக்களை திசை திருப்புவதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு கொண்டு இருக்கிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். இதனை திசைதிருப்பும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சிக்காக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு மற்றும் பொய் வழக்குப் போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருப்பதை மறந்துவிட்டு திமுகவினர் பேசக்கூடாது.

அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிக்காகவே கடன் வாங்கப்படுகிறது. இதனை கடன் என்ற நோக்கில் பார்க்காமல் முதலீடாகவே பார்க்கவேண்டும் நூற்றுக்கு அறுபது சதவீத கடன்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும். ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிக்கும் அளிக்க வேண்டும் அப்போதுதான் மக்களுக்கான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story