தோல்வி பயத்தில் திமுக பொய் பரப்பி வருவதாக பாஜக இளைஞரணி தலைவர் குற்றச்சாட்டு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் களரம்பட்டி பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் புரளியை நீக்க பாஜக சார்பில் வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் உதவி மையம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாவட்டம் வாரியாக படுக்கை வசதி, தடுப்பூசி இருப்பு குறித்து பொது மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் விவேக்கின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல் என்றும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது என்றார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த செல்வம், 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பாஜக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறுவோம் என்றார். தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை கூட ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரித்துப் பார்க்கும் கட்சியாக திமுக உள்ளதாக சாடிய அவர், இந்த நிலை மாற வேண்டும் தமிழகத்தில் அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.
துணை ராணுவத்தினர் மற்றும் சிசிடிவி கண்காணிப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே திமுகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய் பரப்பி வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu