ஊரடங்கை அமைச்சரே மீறலாமா? சேலத்தில் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் ஆலோசனை!
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சேலத்தில் விதிகளை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தொற்று நோய் தடுப்பு பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், சேலம் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில், இன்று நடைபெற்றது.
"ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு, சேலம் மத்திய மாவட்டம் , கிழக்கு மாவட்டம, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சேலத்திற்காக கொரோனா பரவல் தடுப்பு பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் தலைமையில், சமூக இடைவெளியின்றி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்திருப்பதும், ஒரே இடத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதும் ஊரடங்கு விதிமீறல் இல்லையா என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமைச்சரே விதிகளை மீறுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால், இனியேனும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி, தொற்று பரவச் செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்று, அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu