கல்யாணமான 60 நாளில் குழந்தையா? நகைக்கடன் தள்ளுபடிக்கு அமைச்சர் பதில்

கல்யாணமான  60 நாளில் குழந்தையா? நகைக்கடன் தள்ளுபடிக்கு அமைச்சர் பதில்
X
திருமணமாகி 60 நாட்களில் குழந்தை பிறக்குமா என்று, நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விமர்சனம் செய்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், சேலம் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் தரும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடைகளில் பணி நியமனம் வெளிப்படையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்ப அட்டை இல்லாவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்கங்களில் கல்விக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் என அனைத்து வகையான கடன் வழங்கவும், அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக சேர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சியின் போராட்டம் வெறும் அரசியலுக்காக மட்டுமே என்றார். மேலும், கல்யாணம் ஆகி 60 நாட்களில் குழந்தை பிறந்துவிடுமா? என்று விமர்சித்த அவர், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!