சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை: போலீஸ் விசாரணை
கொலையான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் (வயது 27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த சில நாட்களாக சென்னையில் இருப்பதாகவும், தேஜ் மண்டல் எனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் தகவல் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து உரிமையாளர் நடேசன் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்துள்ளது.
மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து உடனடியாக நடேசன் அளித்த தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் நடேசன் கொலை செய்யப்பட்ட பெண் தேஜ் மண்டல் என்பதை உறுதி செய்தார்.
கடந்த ஒரு வருடமாக குமாரசாமிப்பட்டி பகுதியில் குடியிருந்து வரும் தேஜ்மண்டல் பாலியல் தொழிலில் ஏற்கனவே பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும், இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தேஜ்மண்டல் யார் யாருடன் தொடர்பிலிருந்தார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? சமீபத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? யார் ? என பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu