சேலத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை என்ன? ஆட்சியர் விளக்கம்
சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது .
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசிய போது, விலை மதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத் துவத்தை கருத்திற்கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடவும், வாகன ஓட்டிகளுக்கு தரமான சாலை போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுத்திடவும், அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் உரிய எச்சரிக்கை பலகைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் , காவல் துறையினர் , பேருந்து நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது .
குறிப்பாக , மழைப்பொழிவு காலங்களில் ஏற்காடு உள்ளிட்ட சாலைகளில் அதிகளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . வாகனங்களில் அளவுக்கு அதிகமான பயணிகளையோ , பொருட்களையோ ஏற்றுவதை வாகன உரிமையாளர்கள் முற்றிலும் தவிர்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதிவேகம் மற்றும் அனூக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றது . சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் , செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 213 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கையும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 59 நபர்களுக்கும், தவறான பாதையில் வாகனம் ஓட்டிய 31 நபர்களுக்கும் , மது அருந்தி வாகனம் ஓட்டிய 13 நபர்கள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 898 நபர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சாலை பாதுகாப்பின் விழிப்புணர்வை அதிகளவில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் பள்ளி , கல்லூரி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மழைக்காலங்களில் சாலையின் ஓரங்களில் வளரும் செடிகளை அவ்வப்போது சீர் செய்திட ஊரக மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிதிவண்டியில் பயணம் செய்வோர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை , போக்குவரத்துத்துறை , வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி சாலை விபத்தில்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu