மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்  முதல்வர் ஸ்டாலின்
X
குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்திற்கு தண்ணீரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், கல்லணையை பார்வையிடுவதுடன் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மதகு சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறும் முதல்வர், இன்று மாலையே சேலம் வருகிறார். சேலம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 'ஒன்றிணைவோம்' திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

நாளை காலை மேட்டூர் அணைக்கு செல்லும் முதலமைச்சர், காலை 10.30 மணியளவில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறக்க 5, 8,16 என 29 கதவுகள் உள்ளன. இதில் பருவ மழைக்காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

மேட்டூர் அணை நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது