மீனவர் தாக்கப்படுவதை தடுக்க விரைவில் இந்தியா-இலங்கை பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

மீனவர் தாக்கப்படுவதை தடுக்க விரைவில் இந்தியா-இலங்கை பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
X

தலைவாசலில் உள்ள கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இந்தியா- இலங்கை பேச்சு நடத்த வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார்; விரைவில் அது நடைபெறும் என்று, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதை, மாநில மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையமாக தலைவாசல் கால்நடைப்பூங்கா உள்ளது. 2022 ஆம் ஆண்டில், இப்பணிகள் நிறைவடைந்த உடன் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் இங்கு செயல்படும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்ற நிலை இல்லாமல், தனிமனிதனாக ஒவ்வொரு நிலையிலும் உயரும் வகையில் கால்நடை வளர்ப்பு இந்த பூங்கா மூலம் ஊக்கப் படுத்தப்படும்.

வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் இங்கு கல்வி பயிலும் வாய்ப்பும் உருவாக்கப்படும். தலைவாசல் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைப்பதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படும். பல்லுயிர் பெருக்கம் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை ஆய்வாளர்கள் தங்கும் வசதி என அனைத்து பணிகளும் ஓராண்டிற்குள் முழு அளவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். இங்கு செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக்கல்லூரியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் அடுத்த கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்வளத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தநிலை மாறி, ஐந்தாம் இடத்தில் உள்ளது. மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . அண்டை மாநிலமான ஆந்திராவில் நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொண்டு வருகின்றனர் வயல்களில் நெல்லை விளைவிப்பது போல மீன்களை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருப்பதைப்போல, மீன் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படும். தற்போது வயல்களில் மீன் வளர்ப்பதற்கு சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாக கூறுவதால் அதற்குத் தீர்வு கண்டு மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை கடற்படையினாரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது, அவர்களை காக்க பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உள்துறை அதிகாரிகளுடன் பேசி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார். இந்த நிகழ்வு விரைவில் நடைபெறும். கால்நடை பராமரிப்புத்துறை தொடர்பாக புதிய அறிவிப்புகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில், முதலமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags

Next Story
ai healthcare products