சேலம்: வடசென்னிமலை அடிவாரத்தில் குப்பைக்கழிவு- குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது, பிரசித்தி பெற்ற வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், கிருத்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் வடசென்னிமலை, தற்போது குப்பைக்கழிவுகளால் தனது பொலிவை இழந்து வருகிறது. வளையமாதேவி செல்லும் வழியில் மலை அடிவாரப்பகுதியில், சிலர் தொடர்ந்து மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து , இரவில் சிலர் இவ்வாறு கழிவுகளை வீசிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
மலைப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு உணவு கொடுப்பதாகக்கூறி, இன்னும் சிலர் அழுகிய பழங்களையும் கொட்டிச் செல்லும் அவலம் உள்ளது. மதுபாட்டில்கள், திடக்கழிவுகள் என்று, அப்பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அண்மையில் பெய்த மழையால், குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதாரச்சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே, கோவில் நிர்வாகமோ அல்லது சம்பந்தப்பட்டஅதிகாரிகளோ, உடனடியாக ஆய்வு செய்து, மலை அடிவாரத்தில் குப்பை கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இச்செயலில் ஈடுபடுவோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu