குற்றச்சாட்டை மறுக்க திராணி இல்லாமல் மிரட்டும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் ஒன்றியத்திலுள்ள வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி அருந்ததியர் காலனியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி அனைவரையும் வெள்ளாளபுரம் அரசு துவக்கப்பள்ளியில் முகாமிட்டு தங்க வைத்தனர்.
இதனையடுத்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு 160 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து வெள்ளாளபுரம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். நாளைய தினம் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம். வெள்ளம் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டால் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.
மேலும் 100 ஏரி நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்த நிலையில், திமுக அரசு அதனை மெத்தனமாக செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதால்தான் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திராணி இல்லாத ஸ்டாலின், மிரட்டுகிறார். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார். அதிமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என்றார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu