நீட் தேர்வு ரத்து வாக்குறுதி குறித்து ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி குறித்து ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
X

சென்றாயப் பெருமாள் கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை இன்று துவங்கினார். 

நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் பெரிய சோரகை பகுதியில் உள்ள சென்றாயப் பெருமாள் கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை இன்று துவங்கினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் 31 பேரூராட்சிகளில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கினார்.

வழக்கம்போல் நங்கவல்லி அருகே உள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவல்லி பேரூராட்சியில் போட்டியிடும் பகுதியில் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதியின் போது திமுகவினர் நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதியளித்தனர். அதற்க்கான ரகசியம் தங்களிடம் உள்ளதாக மக்களிடம் தெரிவித்தனர். ஆட்சி பொறுப்பை ஏற்றபிறகும் அந்த ரகசியத்தை மக்களிடம் தெரியபடுத்தவில்லை; நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை என்று புகார் தெரிவித்தார்.

நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியதை நம்பி 48 லட்சம் பேர் நகைகளை அடமானம் வைத்தனர். ஆனால் அவர்களில் 13 லட்சம் பேர் மட்டுமே கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர் என்று கூறியதால் பல லட்சம் குடும்பங்கள் கடனாளியானதோடு, நகைகளும் பறிபோகும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக விற்கு வாக்களித்தாலே மக்களுக்கு இந்த நிலைதான் ஏற்படுவது வாடிக்கையானது என்றும் கூறினார்.

அதேபோல, பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை உயர்த்தப்படும் என்ற கவர்ச்சி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றதாகவும் கூறினார். திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை மக்களிடம் உணர்த்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story