பணம் கேட்டு மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது எஸ்பி ஆபிஸில் புகார்
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சல்மான்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அவற்றிலிருந்து, வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தகரிக்கும் நிலையம் அதேபகுதியில் இயங்கிவருகிறது .
இந்நிலையில், நாம் தமிழர்கட்சி பிரமுகர் சல்மான் என்பவர் பொய்செய்திகளை பரப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தொழிற்சாலை நிறுவனங்கள் இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். புகார் மனுவில் இது குறித்து கூறியிருப்பதாவது :
எங்களுடைய விஷாரம் டேனர்ஸ் என்விரோ கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (விஷ்டெக்) எனும் நிறுவனம் மேல்விஷாரம், C. அப்துல் ஹக்கீம் சாலையில் அமைந்துள்ள சுமார் 36 தோல்பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிறுவனமாகும். தற்போது சுமார் 10 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 1996ல் தொழில் முதலீட்டாளர்களின் பங்குத்தொகை மற்றும் மாநில, மத்திய அரசுகளின் உதவியுடன் நீர் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது. இது கடந்த 2011 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட Zero Liquid Discharge (ZLD) ஆலையாக மேம்படுத்தப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
எங்கள் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எந்தவிதமான நச்சு நீரும் வெளியேற்றப்படுவது கிடையாது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நீரை சுத்திகரித்து ரீ-சைக்ளிங் முறையில் மீண்டும் தொழிற்சாலைகளுக்கே தரப்படுகிறது. இது பூஜ்ஜிய திரவ வெளியேற்ற அமைப்பு (ZLD) முறையில் செய்யப்படுகிறது. எனவே எங்கள் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து எந்தவிதமான மாசுபட்ட நீரும் வெளியே விடப்படுவது இல்லை.
இந்நிலையில் கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்து சல்மான் என்பவர் எங்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் எண்ணத்தில் சில தவறான செய்திகளை ஊடகங்கள் மூலம் நேரடியாகவும் பரப்பி வருகிறார். தங்களிடமும் எங்கள் நிறுவனத்தின் மீது பொய் புகார் அளித்துள்ளார். எங்கள் ஆலையின் சுற்றுச் சுவரில் 2 பெரிய துளைகள் ஏற்படுத்தி அதன் வழியாக நள்ளிரவில் சுத்திகரிக்கப்படாத நச்சுத் தண்ணீரை தொடர்ந்து பாலார் கால்வாய் மூலம் பாலாற்றில் வெளியேற்றி வருவதாகவும் அதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், சுவாசக்கோளாறு, சிறுநீரக கோளாறு, தோல் நோய்கள் ஏற்படுவதாகவும் தவறான செய்தியை பரப்பி வருகிறார.
உண்மையில், அப்படி ஏதும் இல்லை . மிகச் சிறந்த நவீன Zero Liquid Discharge முறையில் செயல்பட்டு வரும் எங்கள் ஆலையில் இருந்து நச்சுத் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. கடந்த வாரம் பெய்த கன மழையின் காராணமாக மலைப்பகுதிகளிலிருந்து வெள்ளமாக பல தொழிற்சாலைகளை கடந்து பாலாற்று கால்வாயில் கலந்த மழை நீரை புகைப்படம் எடுத்து எங்களிடம் பணம் பறிக்கும் எண்ணத்தில் இவ்வாறு செய்து வருகிறார். எங்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.
பொதுமக்களிடையே ஆலையிலிருந்து வரும் நச்சு கழிவு நீரால் பல அபாயகரமான நோய்கள் பரவி வருவதாக வீண் வதந்திகளை பரப்பி எங்கள் தொழிற்சாலைகளுக்கு எதிராக போராடும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல், குழந்தை கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், அடிதடி பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னை ஒரு வழக்கறிஞர் என்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் என்று கூறிக்கொண்டும் இதுபோன்று பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பலரையும் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்து வருகிறார்.
எனவே மேற்படி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்வதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர் .
புகாரின் பேரில் இது குறித்து விசாரிக்குமாறு ஆற்காடு காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்திக்கு எஸ்பி தீபாசத்தியன் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆற்காடு காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி நாம் தமிழர் கட்சி பிரமுகர் சல்மான் மீது அளித்துள்ள புகார் குறித்து விசாரணை செய்துவருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu