காதலர் தினம் (பிப்.14)… ஆதலினால் காதல் செய்வீர்..
பைல் படம்
புனித வேலன்டைன் நாள் அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்.காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள்.காதலும் ஒருவகை போர்க்களம் தான். மனம் புகும் போர்க்களம். தமிழர்கள் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவர் என்பதற்கு, காமத்துப்பால் எழுதிய வள்ளுவரும் நமக்குத் துணை நிற்கின்றார்.தமிழர்கள் சலிக்காமல் காதலித்தவர்கள் என்பதற்குபோதிய ஆதாரங்கள் இருக்கின்றன.
உலகமெங்கும் அனுசரிக்கப்படும் காதலர் தினத்தில் நம் இனமும் கலந்து கொள்வதில் தவறில்லை.இதன் பின்புலத்தில் ஏகப்பட்ட கதைகள். ஆதாரங்களுடன் அல்லது ஆதாரங்கள் இல்லாமல் பல கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இன்றைய நாளில் பரிசுப் பொருட்கள் பரிமாறப்படுகின்றன.பரிசு பொருள் எப்பொழுதுமே நம் நினைவுகளுடன் தொடர்புடைய ஒன்றாக இருந்தால் சிறப்பு. அதை நாமே உருவாக்கி இருந்தால் கூடுதல் சிறப்பு.
இன்று காதல் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், பரிசுகள் பழந்தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பது ஒரு வரலாற்று உண்மை! குறிஞ்சி நிலத்து குறிஞ்சிப்பூவை மருத நிலத்து தலைவிக்கு கொடுத்த தலைவன் இங்கே உண்டு. நெய்தல் நிலத்து உப்பை, முல்லை நிலத்து தலைவனுக்குத் தந்த தலைவி இங்கே உண்டு. ரோஜாக்கள் சிவந்து போகும் நாணக் கதைகள், தமிழரின் பரிசு பரிமாறல் கொண்ட இனிமையான பொழுதுகள் என தமிழர் வாழ்வு காதல் ததும்பியதாக தான் இருந்திருக்கிறது.
காதல் என்ற வார்த்தைக்கு இவ்வளவு அழகான அர்த்தம் இருக்குனே தெரியாது, நீ என் வாழ்க்கையில வருகிற வரைக்கும். அப்படினு ஏதாவது ஆத்மார்த்தமா எழுதி கொடுப்பதை விட ஆக சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும்.மனதில் இருந்து வரும் வார்த்தைகளைவிட என்ன பெரிய பரிசு பொருட்கள் இருந்துவிட போகிறது!! எழுதுகோலும், காகிதமும் இணைந்து உருவாக்கும் வார்த்தை கோர்வையைவிட அற்புதமான பரிசை வேறு எந்தபொருட்க ளாலும் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
Beauty never attracts love, But love attracts beauty என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். இருப்பினும் காதல் பற்றிய அனைவரின் பார்வையும் அதுபற்றிய புரிதலும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை, அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை.அழகை மட்டுமே முதன்மையாக கொண்டு வருகிற காதலில் , காதல் இல்லையென்றாலும், அன்பை மட்டுமே முதன்மையாக கொண்டு வருகிற காதலில் காதல் இருந்தே ஆக வேண்டும். இதற்கு சில உதாரணங்களை எளிதாய் சொல்லிவிட முடியும். பிரமிக்கத்தக்க அழகியல்ல லைலா, இருந்தும் அவள் அழகை ரசிக்க, மஜ்னுவின் கண்கள் நமக்கு தேவைப்படுகின்றன.
அழகு என்கிற வரையறையும், அதன் கட்டுமானமும் கலாசாரத்திற்கு கலாசாரம் வேறுபடுகிறது. தலை நிறைய பூ வைத்திருக்கிற நம் தேசத்து பெண், நமது கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிவது, வேறொரு தேசத்தின் கலாசார பின்னணியில் இருந்து வந்தவருக்கு மிரட்சியாக தெரியலாம்.
காதல் என்பதை வரையறுக்க சொன்னால் யாராலும் எளிதாக சொல்லமுடிவதில்லை. நிபந்தனையற்ற அன்பு தான் காதல் என்கிற தொனியில் பூசி மொழுகிற விதமாய், விதவிதமாய் வார்த்தைகள் விழும்.உண்மையில் நிபந்தனையற்ற காதல் என்பதை இலக்கியத்தில் மட்டுமே வாசித்திருக்கிறோம். இயல்பில் அது காணப்படுவதில்லை. காதல் ஒரு உணர்வு அல்ல. காதல் ஒரு செயல். செயலில் இறங்குவோம். ---இங்கிலாந்திலிருந்து சங்கர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu