எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று(ஏப்.6) தொடக்கம்
பைல் படம்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப் 3 -ல் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாக பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்.5 புதன்கிழமை முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்துஎஸ்.எஸ்.எல்.சி.மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை- ஏப்ரல் 6) தொடங்கி வருகிற 20- ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரி யில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும்எழுத இருக்கின்றனர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர்.
மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஏற்கெனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ தகவல் வந்ததால், செய்முறைத்தேர்வுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் செய்முறைத்தேர்வு நிறைவு பெற்றது.
இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏற்கெனவே நடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவராமல் போன விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முதல் நாளான தமிழ் பாடத் தேர்வில் எவ்வளவு பேர் எழுத வராமல் போவார்கள் என்ற கேள்வி கல்வித்துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரணத்தினாலேயே, எப்போதும் அரசின் தேர்வுத்துறை, பொதுத்தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் வெளியிடப்படும்.ஆனால் இந்த ஆண்டில் தேர்வு நடைபெறும் நாள் வரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள்கூட, கல்வித்துறை வட்டாரத்தில் வெளியான மறைமுக தகவல்களை அடிப்படையாக கொண்டவைதான். அதிகாரப்பூர்வமாக புள்ளி விவரங்கள் வெளியிடாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், தேர்வு முடிந்ததும் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ விவரங்களை வெளியிடவும் அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் வெளியிடாததன் மூலம் உணர முடிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu