தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தின விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தின விழா
X

புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி "பன்னாட்டுத் தாய்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன், வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, வட்டாரச் செயலாளர் ம.சின்னராஜா ஆகியோர் பேசினர்.

இவர்களது பேச்சின் சாரம்சம் வருமாறு: 2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி "பன்னாட்டுத் தாய்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி நாள் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை நினைவுபடுத்துகிறது.மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள். தன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.

தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம். தாய்மொழி தமிழில் படித்தால் அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நமது தாய்மொழி தமிழில் வெளிவரும் துளிர் மாத இதழை மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் . மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் நூல்களை தமிழில் வெளியிட்டு வருகிறது. அறிவியல் கருத்துக்கள், ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் தாய்மொழி தமிழ்மொழியிலேயே வரவேண்டும் அப்பொழுதுதான் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் எளிதாக இருக்கும்.

தமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்றும் பேசினார்கள். இந்நிழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரதி, ரேவதி, ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் அப்துல் ஹமீது வரவேற்றார். நிறைவாக மேரி புஷ்பம் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!