அரசுப்பள்ளிகளில் பயிலும் தொலைதூர மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி தொடக்கம்
அரசுபள்ளிகளில் தொலைதூர மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்,குன்றாண்டார் கோவில் ஒன்றியம் உடையாளிபட்டி ,வாலியம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு செல்ல வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்று வர போக்குவரத்து வசதி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வரைவு கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் பள்ளி வசதி இல்லாத குன்றாண்டார்கோவில், அன்னவாசல் ஆகிய 2 ஒன்றியங்களை சார்ந்த 12 பரவலான மக்கள் தொகை கொண்ட தொலைதூர இடவசதி இல்லாததால், பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 115 குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து வசதி நிதி ரூ 3.45 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது அந்த நிதி ஒரு மாணவர்க்கு மாதம் ரூ600 வீதம் 5 மாதங்களுக்கு வழங்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முறையான உரிமம் பெற்ற ஆட்டோ,வேன் பயன்படுத்திக் கொள்ளலாம்.தரமான பழுதற்ற நல்ல நிலையில் இயங்கக்கூடிய வாகனங்களை பெற்றோர்கள் தேர்வு செய்ய கூடாது என்றார் சாமிசத்தியமூர்த்தி.
பின்னர் உடையாளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குட்பட்ட அண்ணாநகர் குடியிருப்பைச் சேர்ந்த 22 தொடக்க நிலை மாணவர்கள் பள்ளி வருவதற்கான போக்குவரத்து வாகனத்தையும், வாலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குடபட்ட ஆவுடையான்கோவில்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த 21 தொடக்க நிலை மாணவர்கள் பள்ளி வருவதற்கான போக்குவரத்து வாகனத்தையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் பொழுது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன், குன்றாண்டார் கோவில் வட்டாரக்கல்வி அலுவலர் நடராஜன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா ,உடையாளிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலெட்சுமி, துணைத்தலைவர் தங்கமணி, பள்ளித்தலைமை ஆசிரியை மகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சுகந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர், வாலியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கஸ்தூரி செல்லப்பாண்டியன், துணைத்தலைவர் ரெங்கராஜ், வாலியம்பட்டி பள்ளித் தலைமை யாசிரியை பிலோமீனாள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.
தொலைதூர மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி திட்டம் உடையாளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளதால் வெளியூரில் உறவினர் வீட்டில் தங்கிபடித்த அண்ணாநகர் குடியிருப்பைசேர்ந்த இரண்டு மாணவிகளை பெற்றோர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி முன்னிலையில் உடையாளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பில் சேர்த்தனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உடனடியாக விலையில்லா புத்தகம், சீரூடை, காலணிகள், குறிப்பேடுகள் வழங்கிப் பாராட்டினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu