வாகனம் மூலம் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பிரசாரம்

வாகனம் மூலம் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பிரசாரம்
X

மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை பிரசார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் வடுகப்பட்டி மங்களா கோயில் ,புதுநகர். கந்தர்வகோட்டை தெற்கு பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கை செய்வது குறித்து வாகன பிரசாரம் நடைபெற்றது.

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு.

அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வாசிப்பு திறனை வளர்க்க தேன் சிட்டு எனும் சிற்றிதழும், நூலகத்திற்கென்று தனி நேரம், இதழ்களின் படைப்புகளில் இருந்து வினாடி, வினா போட்டிகள், திரைப்பட ரசனையும் விமர்சனப் பார்வையும் வளர்க்க பள்ளி தோறும் சிறார் திரைப்பட விழாக்கள்.

இலக்கிய ஆர்வத்தை வளர்க்க இலக்கிய மன்ற செயல்பாடுகள், அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், ஆட்டக் கலைகள், இசை, நாடகம் ,நடனம், ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் கலைத்திருவிழா என்னும் தலைப்பில் பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவில் குழந்தைகளை பங்குபெறச் செய்தல் விளையாட்டுப் போட்டிகள்.

சிறார் திரைப்பட விழா, இலக்கிய மன்றப் போட்டி, வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா, கொரனோ கற்றலை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வித்திட்டம் , மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது .பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்சிற்றுநர் சுரேஷ்குமார் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அக்கச்சிப்பட்டி பள்ளி மேலாண்மை குழு தலைவவி இலக்கியா, துணைத் தலைவி வேதநாயகி வார்டு உறுப்பினர் கலா ராணி, ஆசிரியர்கள் மணிமேகலை, செல்வி ஜாய், வெள்ளைச்சாமி, மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Tags

Next Story