அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் நாள் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக புதுக்கோட்டை மாவட்ட போக்சோ சட்ட ஆதரவு உறுப்பினர் ஆ.மணிகண்டன், கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலர் அ.வெங்கடேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் துணைத் தலைவர் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் ஆதரவு உறுப்பினர் ஆ.மணிகண்டன் பேசியதாவது: பெண் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஆதரவான செயல்பாடுகளில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.சட்டம் ஒழுங்கு, தனிநபர் மகளிர் மேம்பாடு,சமூக நீதி, ஒடுக்கப்பட்டோருக்கான வன் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தமிழ்நாட்டிலேயே சிறப்பான நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக கையாண்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாட்டு ரீதியிலும் கலாசார அடிப்படையிலும் பெண் குழந்தைகள் வீட்டின் முதன்மையானவர்களாக மதிக்கப்பட்டு வருகின்றனர்,
தென் மாநிலங்களை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கான கல்வி வேலை வாய்ப்பு, சம உரிமை ஆகியவற்றில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பிறகான அரசியல் மாற்றங்களும், சமத்துவம் சமூக நீதிக்கு ஆதரவான தலைவர்கள் உருவானதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தேசிய அளவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், அரசின் திட்டங்கள் முதன்மையானதாக இருக்கிறது. குறிப்பாக உயர் கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஊக்குவிப்புத் திட்டங்களை எடுத்து கூறி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றார் மணிகண்டன்.
இதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ஆ.வெங்கடேஸ்வரி பேசியதாவது:பெண்கள் கல்வி கற்பதால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அனைவரும் உணரும் போது இயல்பாகவே சமத்துவக் கல்வி பெண்களுக்கு அமையும் என்பதால் அதற்கான செயல்பாடுகளை சமூக அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் சுதா, உஷா, சரவண மூர்த்தி மற்றும் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவிகள் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தலைவர் அ.ரஹ்மத்துல்லா ஒருங்கிணைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu