தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்
X

கந்தர்வகோட்டை அருகே வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பள்ளி கிளை மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி கிளை மாநாட்டில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

கந்தர்வகோட்டை அருகே வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி கிளை மாநாட்டில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கிளை மாநாடு நடைபெற்றது .தலைமை ஆசிரியர் பொறுப்பு நிர்மல் ராஜ் அனைவரையும் வரவேற்றார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கணேஷ் பூபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்த மாநாட்டிற்கு கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அனைவரும் உறுப்பினராக கொண்டு செயல்பட்டு வருகிறது . அறிவியலில் ஏன்? எதற்கு? எப்படி ?என்று வினாக்கள் எழுப்புவதன் மூலம் அறிவியல் மனப் பான்மை வளர்க்கக் கூடிய பணிகளையும் தமிழ்நாடு அறிவில் இயக்கம் சிறப்பாக செய்து வருகிறது.

மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க கூடிய வாய்ப்புகளையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கி வருகிறது.

ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், மாநில அளவில் தேர்வு மாணவர்கள் அகில இந்திய அளவிற்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி என்ற பட்டத்தையும் வழங்கி வருகிறது.ஒவ்வொரு மாணவர்களும் இளம் விஞ்ஞானி பட்டத்தைப் பெற வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், மாணவர்கள் துளிர் இதழ் வாசிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் .ஆசிரியர்கள் 16 பேர் தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். பள்ளியின் கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக பள்ளியின் கிளை தலைவராக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் குணசேகரன், செயலாளராக அபிஷா, பொருளாளராக ராஜேந்திரன் ஆகியோ தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப் பட்ட பள்ளி கிளை நிர்வாகிகளை சிறப்பாசிரியர் அறிவழகன் வாழ்த்தி பேசினார். புதிய நிர்வாகிகளுக்கு துளிர் இதழ் பரிசளிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் ஏற்புரை வழங்கினார்கள். ஆசிரியர் வேலாயுதம் மற்றும் மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் அபிஷா நன்றி கூறினார் ‌‌.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil