மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்

மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
X

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம்  குன்னான்டார்கோவில் அருகே சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது

அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர் களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டுமென அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது

அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டுமென அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று குன்னான்டார்கோவில் அருகே சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் க.ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முன்னதாக இன்றைய சூழலில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் எனும் தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்க அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கலந்து கொண்டு பேசும்போது இன்று இருக்கும் பள்ளிக்கல்வி சூழல்கள் மற்றும் சுற்றுச்சூழல்களில் ஏற்படும் அச்சுறுத்தல்கள், கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியங்கள், குறித்தும் அறிவியல இயக்கம் மக்களிடம் இன்னும் செய்ய வேண்டிய அறிவியல் பரப்பும் பணிகள் குறித்தும் பேசினார். கல்வி அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வசதிகளை மேம்படுத்த நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாநில துணைத்தலைவர் மாணிக்கத்தாய், இன்றைய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்தும், மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன் மக்களுக்கு மருத்துவ வசதிகள் தரமாக கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், கல்வி உரிமை சட்டம் போல மருத்துவ உரிமை சட்டம் (Right to Health) நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.பின்னர் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துகுமார் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் விமலா வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:பொதுத்தேர்வுக்கு வராத 50,000 மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டு மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் கந்தர்வகோட்டை கரம்பக்குடி ஒன்றியங்களையும் இணைத்து குடிநீர், நீராதாரம் வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் .

கீரனூர், நமுணசமுத்திரம், திருவப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். கோடை விடுமுறையில் குழந்தைகள் அறிவியல் திருவிழாக்களை ஒன்றியந்தோறும் சிறப்பாக நடத்துவது . தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் பெண்களை தரக்குறைவாக விளம்பரப்படுத்தும் முறையை அரசு தடை செய்ய வேண்டும்.

எரிபொருள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசியை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் குடிநீர் அனைவருக்கும் தூய்மையானதாகவும், சுகாதாரமானதாகவும், தரமாகவும், வழங்கிட தேவையான நீர்த்தேக்கத் தொட்டி கண்காணிப்பு முறைகளை அரசு உறுதிப்படுத்தி பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும்.

போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுதந்திரமான கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பொதுமக்களோடு செய்ய வேண்டிய மக்கள் பணிகள் குறித்து பேசினார்.

நிறைவாக குன்னாண்டார்கோவில் வட்டார செயலாளர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், கமலம், துரையரசன், பவணம்மாள், கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, கறம்பக்குடி வட்டாரத் தலைவர் வீரபாலன் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் அறிவியல் இயக்க பொதுக்குழு உறுப்பினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story